ஜோன்ஸ்டனுக்கு அழைப்பாணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிர்வரும் ஜூலை 04ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜோன்ஸ்டன் பெனாண்டோ வர்த்தக அமைச்சராக இருந்த வேளையில் சதொச ஊழியர்களை அவர்களது கடமைகளுக்கு புறம்பாக, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, சதொச முன்னாள் தலைவர் எராஜ் பெனாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோருக்கு எதிராக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆணைக்குழுவினால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவரின் எழுத்துமூல அனுமதி இல்லையென, பிரதிவாதி சார்பில் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபணையைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்றம், குறித்த வழக்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உரிய முறையில் தாக்கல் செய்யவில்லை அறிவித்து, குறித்த மூவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன், சதொச முன்னாள் தலைவர் எராஜ் பெனாண்டோ, அதன் முன்னாள் செயற்பாட்டு அதிகாரி மொஹமட் ஷாகிர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீண்டும் கடந்த மே 30ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts