குவிந்த திரையுலகினர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்

நடிகை நயன்தாரா, டைரக்டர் விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் நேற்று கோலாகலமாக நடந்தது. மணமக்களை ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நேரில் வாழ்த்தினர். சென்னை, கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா, தமிழில் 2005-ல் ‘ஐயா’ படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறக்கிறார். தமிழ்நாட்டின் லால்குடியை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர் விக்‌னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது அவருடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது.

இவர்கள் இருவரும் தொடர்ந்து 7 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. எப்போது இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்பது திரைப்பட ரசிகர்களின் பேசுபொருளாக அமைந்தது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கேரளாவில் நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. கோலாகல திருமணம் இந்த நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கோலாகல திருமணம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதற்காக ஓட்டலில் பிரத்யேகமாக கண்ணாடி மாளிகை போன்ற அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அதிகாலை முதல் விருந்தினர்கள் வரத்தொடங்கினர். வாயிலில் நின்ற பாதுகாவலர்கள் அழைப்பிதழுடன் வந்தவர்களை மட்டும் பார்த்து உள்ளே அனுமதித்தனர்.

விக்னேஷ் சிவன், அதிகாலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ” நீண்டநாள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்” என்று பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். காலை 8.45 மணிக்கு திருமண சடங்குகள் தொடங்கின. விக்னேஷ் சிவன் பட்டு வேட்டி, சட்டை அணிந்து இருந்தார்.

நயன்தாரா சிவப்பு நிறத்தில் உயர்ரக சேலை அணிந்து இருந்தார். 20 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதவும், மேளதாள மங்கள வாத்தியங்கள முழங்கவும் காலை 10.25 மணிக்கு நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். அப்போது திருமணத்துக்கு வந்து இருந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.

ரஜினி-ஷாருக்கான் வாழ்த்து நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஜய்சேதுபதி, விக்ரம் பிரபு, பொன்வண்ணன், கவின், இந்தி நடிகர் ஷாருக்கான், மலையாள நடிகர் திலீப், நடிகைகள் ஜோதிகா, ராதிகா, குஷ்பு, அஜித்குமார் மனைவி ஷாலினி, கிருத்திகா உதயநிதி, நடிகை ஷாமிலி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்

டைரக்டர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், கவுதம் மேனன், மோகன் ராஜா, விஷ்ணுவர்த்தன், ஹரி, அட்லி, சிறுத்தை சிவா, எடிட்டர் மோகன், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், ஞானவேல் ராஜா, ராஜசேகரபாண்டியன், தமிழ்க்குமரன், கல்பாத்தி அகோரம், லலித்குமார், மதன், போனிகபூர், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், நடன இயக்குனர் கலா, பாடலாசிரியர் தாமரை உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வாழ்த்தினார்கள் 20 வகை உணவுகளுடன் விருந்து திருமண விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு பன்னீர் பட்டாணி கறி, சேப்ப கிழங்கு புளிக்குழம்பு, சாம்பார் சாதம், தயிர்சாதம், இளநீர் பாயாசம், கேரட் ஐஸ்கிரீம் உள்பட 20 வகையான சைவ உணவுகளுடன் கூடிய விருந்து பரிமாறப்பட்டது. நயன்தாரா, விக்னேஷ் திருமண விழாவை ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பும் உரிமை ரூ.25 கோடிக்கு விற்று இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அதற்கான கேமராமேன்கள் மட்டுமே திருமண நிகழ்ச்சிகளை படம் பிடித்தனர்.

பத்திரிகை புகைப்படக்காரர்களை அனுமதிக்கவில்லை. விருந்தினர்கள் திருமண நிகழ்ச்சிக்கு செல்போன் கொண்டு வர தடை விதித்து இருந்ததால் காரிலேயே செல்போன்களை விட்டு விட்டு வந்தார்கள். மாலையில் திருமண புகைப்படத்தை நயன்தாரா தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார். 1 லட்சம் பேருக்கு விருந்து நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தையொட்டி, நயன்தாரா ஏற்பாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களில் முதியோர் மற்றும் குழந்தைகள் 1 லட்சம் பேருக்கு நேற்று மதியம் அறுசுவையுடன் கல்யாண விருந்து வழங்கப்பட்டது. நயன்தாரா திருமணம் நடந்த நட்சத்திர ஓட்டலின் முன்னால் உள்ள கடற்கரைசாலையில் நடிகர்-நடிகைகளை காண ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு கூட்டத்தினரை அப்புறப்படுத்தினர்.

Related posts