பிரதமருக்கு சுமந்திரன் ஆலோசனை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசாங்கமே முன்வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (12) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு கொந்தளிப்பான அரசியல் நிலமை காணப்படுகின்றது. இந்த நிலை தொடர்பில் ஆராய்வதற்காக எமது கட்சியின் அரசியல் உயர் மட்ட குழு கூடியது. இந்த அரசியல் கொந்தளிப்புக்கு அடிப்படைக் காரணம் பொருளாதார வீழ்ச்சி. எப்படியாக இலங்கையினுடைய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதற்கான காரணிகள் என்ன? இனி என்ன மாதிரியாக இந்த நிலமை மாறப் போகிறது என்பன குறித்து நீண்ட நேரமாக கருத்து பரிமாற்றம் செய்தோம்.

சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார வீழ்ச்சி ஒன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய பக்க விளைவுகளை எமது மக்கள் எதிர் நோக்க வேண்டிய நிலையும் வந்திருக்கிறது. இந்த நிலையில் வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய பிரதான அரசியல் கட்சியாக நாங்கள் எனன விதமான தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும். மக்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகளை கொடுக்க வேண்டும். பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலையில் என்ன மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி மிகவும் ஆழமாக பேசியிருந்தோம்.

இந்த பொருளாதார நிலை காரணமாக இன்னும் மோசமான நிலைக்கு நாடு தள்ளப்படுவதற்கான நிலமை தான் காணப்படுகின்றது. அது எமது மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதிக்கப் போகிறது. அவர்களது பொருளாதார நிலமையும் பாதிக்கப் போகிறது. அதற்கு மாற்று வழிகளாக பல யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. வீட்டுத் தோட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியுள்ளது. இது எங்களது மக்களுக்கு புதிதான விடயமல்ல. இருப்பினும் மக்கள் தயாராக இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் என்ற வகையில் அவர்களுக்கான வழிகாட்டுதல்களை நாங்கள் கொடுப்போம். எங்கள் பொருளாதார நிபுணர்கள் ஊடாக அது தொடர்பில் கலந்துரையாடுவதுடன், எமது அடுத்த மட்ட பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம்.

இம்முறை மே தினம் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் கொண்டாடப்படும். அது தமிழ் தேசிய மே தினமாக நடத்தப்படும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் அதில் கலந்து கொள்வார்கள் என நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.

இன்று அரசாங்கம் ஒன்று இல்லாத நிலமை காணப்படுகின்றது. அமைச்சரவை என நான்கு பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர் உடனடியாக இராஜினாமா செய்தார். நிதி அமைச்சர் இல்லாத நாடு என நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த போது அவர் பாராளுமன்றத்தில் பேச எழுந்தார். அப்போது நீங்கள் தானா தற்போது நிதி அமைச்சர் என அவரிடம் நான் கேள்வி கேட்டேன். ராஜினாமா செய்து விட்டு, தான் நிதி அமைச்சர் என அவர் சொன்னார். அவ்வாறு அவர் சொன்ன போது அவருடன் கூட இருந்தவர்கள் எல்லாம் வியப்பாக அவரை திரும்பி பார்த்தார்கள். ஏனெனில் இப்பொழுது அவர் தான் நிதி அமைச்சர் என்பது அவர்களுக்கே தெரியாது. இப்படியாக நாடு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக சென்று பேச வேண்டும். கடன் கொடுத்த நாடுகள், அமைப்புக்களுடன் பேச வேண்டும். அமைச்சரா, இல்லையா என்று புரியாத நிலையில் உள்ளவர் தான் போய் பேச போகிறார். சர்வதேச நாணய நிதியமும், மற்றைய நாடுகள், அமைப்புக்களும் உதவிக்கு முன் வருவதாக இருந்தால் கூட நாட்டில் ஒரு அரசியல் ஸ்திர தன்மை இல்லாமல் அவர்கள் அந்த செயற்பாட்டுக்குள் வர மாட்டடார்கள். ஆகவே அரசியல் ஸ்திரதன்மையை உருவாக்குவது அத்தியாவசியமான செயற்பாடு. அதற்கு உகந்த வகையில் ஜனாதிபதியோ, பிரதமரோ செயற்படுவதாக தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக நான் கொழும்பில் இருந்த காரணத்தினால் பல்வேறு தலைவர்களுடன் பல கலந்துரையாடல்களில் பங்குபற்றியிருக்கிறேன். எதிர்வரும் நாட்களில் பிரதான எதிர்கட்சி சில முன்னெடுப்புக்களை செய்ய உள்ளார்கள். அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதிபக்கு எதிரான குற்றப் பத்திரிகை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான சட்டப் பிரேரணை உட்பட பல விடயங்களை முன்னெடுக்கவுள்ளார்கள். இது தொடர்பில் ஆராய்ந்தோம்.

நாட்டில் இளைஞர்களாக சேர்ந்து தன்னெழுச்சியாக நடத்தப்படும் போராட்டங்களில் அரசியல்வாதிகள் இல்லாமலேயே நடத்தப்படுகின்றது. எமது பகுதிகளிலும் சில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் ஆர்வமாக உள்ளார்கள். இந்த மூன்று பிரேரணைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும். அந்த தீர்மானம் பங்காளிக் கட்சிகளுடன் சேர்ந்து கலந்துரையாடி உத்தியோக பூர்வமான தீர்மானமாக எடுப்போம். எமது மக்கள் மத்தியிலும் இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று எமது கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை எமது கட்சி தலைவர் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கு தெரியப்படுத்துவார்.

தேசிய அரசாங்கம் வந்தால் நாங்கள் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. அவ்வாறான ஒரு தேவையை இப்போது நாங்கள் கருதவில்லை. இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு மாறி மாறி வந்த அரசாங்கங்களே காரணம். மிகவும் முக்கிய காரணம் 30 வருடத்திற்கு மேலாக ஒரு போரை நடத்தியது. அதற்காக கண்மூடித்தனமாக எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கினார்கள். அதற்கு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பொறுப்பு. இறுதியாக தவறு ஏற்பட்டது இந்த ஜனாதிபதியின் காலத்தில் தான். இதனை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களிடத்தில் உள்ளது. இதில் நாம் பொறுப்பில்லாதவர்களாக செய்யற்பட முடியாது. இதனுடைய தாக்கம் எங்களது மக்களுக்கும் மோசமாக அமையப் போகிறது. அவ்வாறு எமது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் செயற்பட வேண்டும். அதற்கு தேவையான ஆதரவை இடைக்கால அரசாங்கதற்கு கொடுக்க வேண்டுமாக இருந்தால் அப்போது அதற்கான முடிவை எடுப்போம். ஆனால், அமைச்சரவையில் நாங்கள் சேர்ந்து இயங்க வேண்டிய தேவை ஏற்பட வில்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக நான் சந்திக்கவில்லை. அவர் என்னை சந்திக்க கேட்டிருந்தார். அதனடிப்படையில் இரவு அவரை தனியாக சந்தித்து பேசியிருந்தேன். அரசியலமைப்பு தொடர்பாக பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு என பல விடயங்கள் பேசப்படுகின்றன. பல கட்சித் தலைவர்கள் என்னுடன் பேசுகிறார்கள். இலவசமாக சட்ட ஆலோசனை பெறுகிறார்கள் என நான் யோசிகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் என்னுடன் பேசினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் தொலைபேசியில் காலையில பேசியிருந்தார். வேறு தலைவர்கள் பலர் பேசுகிறார்கள். சட்ட நிலைப்பாடு தொடர்பாகவும் அறிகிறார்கள். அரசியல் நிலையை ஸத்திரதன்மைக்கு கொண்டு வருதல் தொடர்பாக நடைபெறும் பேச்சுக்களிலும் நான் கலந்து கொண்டு வருகின்றேன். பிரதமர் மஹிந்த அவர்களுக்கு நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனையை அரசாங்கமே கொண்டு வந்தால் சில விடயங்களில் முன்னேற முடியும் என ஆலோசனை வழங்கியுள்ளேன் எனத் தெரிவித்தார்.

Related posts