4 புதிய படங்களில் வடிவேலு

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடை காரணமாக, சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார்.

கடந்த வருடம் சமரச பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்டு தடையும் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதையடுத்து சினிமாவில் இரண்டாவது ரவுண்டை வடிவேலு தொடங்கி இருக்கிறார்.

தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் வடிவேலு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டைரக்டர் கவுதம் மேனனும் வடிவேலுவை வைத்து முழு நீள நகைச்சுவை படம் ஒன்றை இயக்க பேசி வருவதாக தெரிவித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திலும் வடிவேலுவை, நகைச்சுவை வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ரஜினியும், வடிவேலுவும் இணைந்து நடித்து இருந்தனர். அந்த படத்தில் இருவரின் நகைச்சுவை காட்சிகள் அனைவராலும் அதிகமாக பேசப்பட்டன.

Related posts