தேசிய அரசில் தமிழ் முற்போக்கு கூட்டணி இணையாது

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி தேசிய அரசொன்றை அமைப்பதற்கு அரசு முயற்சி எடுத்துவந்தாலும், அவ்வாறானதொரு அரசுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவை வழங்காது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தலவாக்கலையில் இன்று (27) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, தேசிய அரசொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு விடுக்கப்பட்டாலும் நாம் அதில் இணையமாட்டோம். தேசிய அரசமைப்பதால் பாரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை. இதே ஜனாதிபதிதான் ஜனாதிபதி பதவியில் தொடர்வார்.

நாடாளுமன்றத்திலும் அவர்களின் அதிகாரமே காணப்படும். எனவே, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் புதியதொரு ஆட்சியே எமது இலக்கு. அந்த இலக்கை அடையவே எமது எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அதற்காக அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு, மக்கள் பக்கம் நின்று ஒத்துழைப்பு வழங்குவோம்.

உதவி ஆசிரியர் பிரச்சினை தொடர்பில் நிதி அமைச்சருடன் பேச்சு நடத்தியுள்ளேன். கடிதமும் கையளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம்.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சரவை தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை (28) சந்தித்து பேச்சு நடத்தும். இந்திய தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ள பாரத பிரதமருக்கான ஆவணம் மற்றும் மலையக மக்களுக்கான திட்டங்கள் பற்றி இதன்போது கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Related posts