ஜெயலலிதா மரணம்:ஓ.பன்னீர் செல்வத்திடம்

இன்றைய ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நிறைவுபெற்றது. நாளை, மீண்டும் ஆஜராக ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. அந்த மர்மம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை தொடங்கியது. இடையில் சில நாட்களாக விசாரணை நடைபெறவில்லை.

இந்தநிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பேரில் தற்போது மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது.

ஏற்கனவே ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக 154 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி முடித்து உள்ளது. அவர்கள் அனைவரது பதில்களும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சசிகலா தரப்பினர் கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பல்லோ டாக்டர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.

இந்தநிலையில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா உறவினர் இளவரசி ஆகியோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் அழைப்பாணை அளித்து இருந்தது.

அதை ஏற்று ஓ.பன்னீர்செல்வம், இன்று ஆறுமுகசாமி ஆணைய அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் ஆணைய விசாரணை முன்பு நேரில் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர மற்ற உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என ஓ.பன்னீர் செல்வம் தனது வாக்கு மூலத்தில் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அவர் தனது வாக்கு மூலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரெயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவை பார்த்தேன்; அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை.

2016 செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது.

சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டேன், மறுநாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனை சென்று அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன்

ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் எனக்க்கு தெரியாது.துணை முதல்- அமைச்சர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கும் கோப்பில் நானும் கையெழுத்திட்டுள்ளேன் என ஆறுமுகசாமி ஆணையம் முன் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் உணவு இடைவேளைக்குப் பிறகும் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது ஓ. பன்னீர் செல்வம் அளித்த வாக்கு மூலத்தில் அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது

மேலும் தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே

சசிகலாவின் அழைப்பின் பெயரில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கக் கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது.

ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து ராம் மோகன் ராவ், தன்னிடம் எதுவும் பேசவில்லை; அப்படி கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் என கூறினார்.

மின்தடை காரணமாக இறுதி நேரத்தில் விசாரணை நிறுத்தப்பட்டது.

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை மீண்டும் ஆஜராகும்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு உத்தரவு பிறபிக்கபட்டு உள்ளது.

ஓ.பன்னீர் செல்வத்திடம் மூன்றரைமணி நேரம் நடத்தபட்ட விசாரணையில் 78 கேள்விகள் கேட்கப்பட்டது.

Related posts