அனைவரும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பார்க்க வேண்டும்

தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முதல்-மந்திரியுமான பூபேஷ் பாகெல் அழைப்பு விடுத்துள்ளார்.

காஷ்மீரில் 1990-ம் ஆண்டு வாக்கில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தபப்ட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இதற்கிடையில், காஷ்மீரில் 1990-ம் ஆண்டுவாக்கில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். அனுபம் கெர், பல்லவி ஜோஷ், பாஷா சும்ப்லி, தர்ஷன் குமார் உள்ளிட்டோ இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களும் இந்த படத்திற்கு பல்வேறு வரிச்சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்திய பிரதமர் மோடியும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்த படத்தை அவமதிப்பு பிரசாரம் செய்ய சதி நடக்கிறது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முதல்-மந்திரியுமான பூபேஷ் பாகெல் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் பிரதமர் மோடிக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்துவிட்டு அது தொடர்பாக எங்கள் கருத்துக்களை கூறுவோம். எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன்’ என்றார்.

Related posts