இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடன்

பெற்றோலியப் பொருட்களுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்யம் வகையிலான ஒத்துழைப்பு வழங்குவதற்கு இந்தியா இக்கடனை வழங்குகின்றது.

இதற்கமைய, இந்தியாவின் Exim வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ளது.

இந்த கடன் வசதியின் கீழ் கொள்வனவு செய்யப்படும் முதலாவது எண்ணெயின் ஒரு தொகை இம்மாதம் 15 ஆம் திகதி கிடைக்கவுள்ளது.

குறித்த 500 மில்லியன் டொலரில் 75 வீதமானவை இந்தியாவிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்காக பயன்படுத்த வேண்டும் என இந்திய EXIM வங்கி தெரிவித்துள்ளது.

ஏனைய 25 வீதத்தை இந்தியா தவிர்ந்த மூன்றாவது தரப்பிடமிருந்து தகுதி பெற்ற ஒப்பந்தக் காரரிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்காக பயன்படுத்த முடியும்.

கடன் கடிதத்தின் (LoC) கீழ் இந்த ஒப்பந்தம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதோடு, LoC ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து முனையப் பயன்பாட்டு காலம் 6 மாதங்கள் ஆகும். இந்த கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை 12 மாதங்களை விட நீடிக்க முடியாது என இந்திய EXIM வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியா ஏற்கனவே அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக வழங்கிய 500 மில்லியன் டொலர் கடன் , 400 மில்லியன் டொலருக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ள பின்புலத்திலேயே இந்தியா இந்த கடன் தொகையை வழங்குகின்றது.

மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இதன் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சர் அடுத்து வரும் சில வாரங்களில் இந்தியா செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts