ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் எந்த ஒரு சரத்தும் கிடையாது

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டத்தினால் ஊடக சுதந்திரம் பறிக்கப்படவோ கட்டுப்பாடுகள் விதிக்கப்படவோ மாட்டாதென இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் அபிவிருத்திக் கூட்டிணைப்பு, கண்காணிப்பு அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். இது, தகவல் அறியும் சட்டத்துக்கு அப்பால் செல்லும் ஒரு சட்டமல்ல என்று குறிப்பிட்ட அவர், ஊடக அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடியே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் ஒரு சரத்தாவது இதில் இருந்தால் முன்வைக்குமாறு அவர் எதிரணிக்கு சவால் விடுத்தார்.

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்ட மூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2019 ஆம் ஆண்டு இந்த சட்டமூலம் சமர்ப்பிக்க யோசனை முன்வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கும் துறைசார்ந்தவர்களுக்கும் தமது கருத்துக்களை முன்வைக்க ஏழு தடவைகள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டன. 2019 மார்ச் முதல் பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

எதிர்ப்பை முன்வைக்க 02 வாரங்கள் அவகாசம் இருந்ததோடு அக்காலப்பகுதியில் நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பிருந்தது.

02 வாரம் கடந்து இருவர் நீதிமன்றம் சென்றிருந்தனர். அனைத்து வெளிப்படைத் தன்மையுடன் இதனை முன்வைத்துள்ளோம்.

நீதிமன்றம் செல்ல மறந்ததாக மயந்த திசாநாயக்க நேற்றை கூட்டத்தில் பங்கேற்றபோது தெரிவித்தார். அவர் நல்ல பல கருத்துக்களை முன்வைத்தார்.

அனைத்து அரச துறைகளையும் கணனி மயப்படுத்தவும் பிரஜைகள் சேவைகள் கணினி மயப்படுத்தவும் நோக்காகக் கொண்டே தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்படுகிறது. உலகில் அநேக நாடுகளில் அரச பொறிமுறை கணினி மயப்படுத்தப்படாததால் குறைபாடுகள் ஏற்பட்டன. டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை முன்னெடுக்க 30 மாத திட்டம் தயாரிக்கப்பட்டது. அதில் சட்ட குறைபாடுகள் உள்ளன. அவற்றை சீர் செய்யாது இதனை முன்னெடுக்க முடியாது. தரவு தொடர்பில் உலக அளவில் பேசப்படுகிறது. எமது நாட்டின் எதிர்காலத்திற்காக இதனை பயன்படுத்த வேண்டும்.தரவுகளை பாதுகாக்க தேவையான சட்ட பின்னணி ஏற்படுத்த வேண்டும். வங்கிகளுக்கோ தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கோ தரவுகளை வழங்கினால் எவ்வாறு அவை பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான பாதுகாப்பே இந்த சட்டமூலத்தினூடாக வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் மயமாக்கலுக்கு இவ்வாறான சட்டமூலங்கள் அவசியமானவை. டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடப்படுகிறது.

விரைவில் அதனை கொண்டு வருவோம். பிரஜைகள் சேவைகள் வழங்கும் மேடையாக இந்த மாற்றங்கள் அமையும்.

அனைத்து பிரஜைகளும் தமது விபரங்களை கிராம சேவகர்களுக்கு வழங்குகிறோம். அந்த தரவுகளுக்கு என்ன நடக்கிறது? அது பற்றி யாருக்கும் தெளிவு கிடையாது. நீதிமன்றம் சென்று வழக்கு தொடரவும் முடியாது. இதற்கு டிஜிட்டல் மயமாக்கலே ஒரே தீர்வு.

பிரதேச சபைகள் உள்ளுராட்சி நிறுவனங்களிலும் டிஜிட்டல் மயமாக்கல் மேற்கொள்ள இருக்கிறோம். கடவுச்சீட்டு,அடையாள அட்டை ,கிராம சேவகர் அறிக்கை,பொலிஸ் அறிக்கை பெற வரிசையில் இருக்கும் நிலை மாற்றப்படும். வெளிநாடு செல்வதற்கு பல இடங்களுக்கு சென்று பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.இதனை சில மணி நேரங்களில் விரல்களை தட்டி மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட வேண்டும்.

இந்த சட்டம் தகவல் அறியும் சட்டத்தை மீறிச் செல்லாது.அத்தோடு ஊடகவியலாளர்களின் உரிமைகளை தடுக்கும் வகையில் இந்த சட்டமூலம் அமையாதென்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறோம்.

18-, 20 மாதங்களில் பின்னர் தரவு செயற்பாட்டு நிறுவனத்தின் ஊடாக தேவையான ஒழுங்குமுறைகள் முன்வைக்கப்படும். மக்களின் கருத்து பெற்றப்பட்ட பின்னர் அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னரே இந்த நிறுவனம் செயற்படும். இதற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார். அதற்கான தகைமைகளும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சட்டத்தின் கீழ் மக்களின் தனித்துவம் பேணப்படும். தரவுகளை யார் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது தரவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பொறுப்பு கூறுவதாக இருந்தால் எந்தச் சட்டம் வந்தாலும் பிரச்சினை கிடையாது. அநேகமான ஊடகவியலாளர்கள் நேர்மையாக செயற்படுகிறார்கள் என்றார்.

Related posts