மாதம் ரூ.1000 உரிமைத் தொகை நிச்சயம்

’முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கண்டிப்பாக வழங்கப்படும்” என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று ஆத்தூர், தாதகாப்பட்டி, கோட்டை மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார், அதையும் குறைத்திருக்கிறார். பெட்ரோல் விலை, டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். முதல் கட்டமாக, பெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்துள்ளார்.

முதல்வர் இரண்டு நாள்களுக்கு முன்பு பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்திருக்கிறார். கண்டிப்பாக மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்காக உரிமைத் தொகை, மாதம் ஆயிரம் ரூபாய், வருடத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதிமொழி அளித்துள்ளார். தேர்தல் சமயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றி வருகிறார்” என்று கூறினார்.

Related posts