சித் ஸ்ரீராமுக்கு இசை தேவையில்லை, அவரே இசைதான்

பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமை புகழ்ந்து நடிகர் அல்லு அர்ஜூன் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், தனஞ்செயா, அஜய், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார்.

புஷ்பா திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன. நடிகை சமந்தா நடனமாடிய ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் சில சலசலப்பையும் உருவாக்கியிருந்தது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஸ்ரீவல்லி’ என்ற பாடலை பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் ‘ஸ்ரீவல்லி’ பாடலை பாடிய சித் ஸ்ரீராமை புகழ்ந்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எனது சகோதரர் சித் ஸ்ரீராம் ‘ஸ்ரீவல்லி’ பாடலை ஒரு நிகழ்வில் பின்னணி இசை எதுவும் இல்லாமல் பாடினார். அவரது குரலுக்கு பின்னணியில் இசைக்கருவிகள் மெதுவாக வாசிக்கப்படும் என்று நான் காத்திருந்தேன்.

ஆனால் பின்னணியில் எதுவும் இசைக்கப்படவில்லை. அவர் தொடர்ந்து பின்னணி இசை இல்லாமல் பாடினார். அவர் பாடியதை கேட்ட நான் அப்படியே அடித்துச் செல்வது போல் உணர்ந்தேன். அவர் குரலில் ஏதோ மாயம் இருக்கிறது என்பது மட்டும் எனக்குள் ஓடிக்கொண்டு இருந்தது. அவருக்கு இசை தேவையில்லை, அவரே இசைதான்’ என்று கூறியுள்ளார்.

Related posts