இந்தியப் பொருளாதாரத்தில் K-வடிவ மீட்சி

இந்தியப் பொருளாதாரத்தில் சில பிரகாசமான புள்ளிகள் இருந்தாலும் கூட சில கரும்புள்ளிகளும் இருக்கின்றன ஆகையால் மத்திய அரசு செலவுகளை கவனமாக திட்டமிட வேண்டும் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ரகுராம் ராஜன், பொருளாதார நிலவரம் மீது தனது வெளிப்படையான விமர்சனங்களுக்கென்றே அறியப்பட்டவர். இந்நிலையில் அவர் இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலவரம் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அதில் அவர் “பொருளாதாரத்தில் K-வடிவ மீட்சி (K-shaped recovery ) என்ற ஒன்று இருக்கிறது. பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் அது K-வடிவ மீட்சியை நோக்கிச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த மாதிரியான மீட்சியில், தொழில்நுட்ப துறையும், பெரும் நிறுவனங்களும் லாபகரமாக செயல்படும். அதே வேளையில் சிறு, குறுந் தொழில்கள் கடனில் சிக்கித் தவிக்கும்.
எனது மிகப் பெரிய கவலையே, நடுத்தர வர்க்கத்தினருக்கும், சிறு, குறுந் தொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தல் தரும் வகையில் வகையில் பொருளாதார மீட்சி இருக்கக் கூடாது என்பதே. நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் வாங்கும் சக்தி குறைந்து வருவது கவலைக்குரியது. ஒரு புறம் ஐடி துறை பளிச்சிட்டாலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இவையெல்லாம் K-வடிவ மீட்சியாக மாறலாம்.
பொருளாதாரத்தில் மீண்டு வரும் சூழலில் ஒமைக்ரான் தாக்கியுள்ளது மருத்துவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்னடைவை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இமெயில் மூலம் அளித்தப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது அதில் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள், சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜன் தற்போது அமெரிக்காவின் சிகாகோ பிசினஸ் பள்ளியில் பேராசிரியாக இருக்கிறார். ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த போது அவர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருந்ததாலேயே மாற்றப்பட்டார் என்று அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது

Related posts