இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருக்கிய தினசரி கொரோனா பாதிப்பு…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,47,417 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் புதிய ஆண்டில் புதுவேகம் எடுக்கிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த தொற்று பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலை மாறி இப்போது ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு பாதிப்பு என்கிற நிலையில், கொரோனா பரவல் ‘ஜெட்’ வேகம் எடுத்துள்ளது.

நேற்று முன்தினம் பாதிப்பு சற்று குறைந்து 1 லட்சத்து 68 ஆயிரத்து 63 ஆக பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்து 720 ஆக பதிவானது.

இந்நிலையில் நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி பதிவாகி உள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 27 சதவீதம் அதிகமாகும், (இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 46,723 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 47 ஆயிரத்து 417 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,63,17,927 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,85,035 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 84,825 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,47,15,361 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 11,17,531 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,54,61,39,465 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76,32,024 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 18,86,935 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 69,71,61,315 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Related posts