நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

நடிகர், பாடகர், இயக்குனர், நடனக்கலைஞர் என பன்முக திறமைகளைக் கொண்டவரான சிலம்பரசன், தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.

மேலும் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு முன்னனி கல்வி நிறுவனங்கள் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிலம்பரசனுக்கு வரும் 11 ஆம் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.

இதுகுறித்து, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் கூறியதாவது;-

“நடிகர் சிலம்பரசனுக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களைக் கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள்.

அந்த வகையில் ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன். விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருவரின் வயதும், அவரின் தொழிலும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன்.

நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கவுரவிப்பதன் பொருட்டே இந்த கவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம். அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி”

இவ்வாறு ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிலம்பரசன் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts