அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க தயார்

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென அக்கட்சித் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் பொதுக்கொள்கையுடன் செயற்பட எந்த கட்சியும் முன்வரலாம். மேலும் தற்போதைய ஜனாதிபதி போராட்ட அரசியலையே மேற்கொண்டு வருகிறார். நான் பெளத்தனாகவுள்ளேன் ஆனால் மத வேறுபாடு இனவேறுபாடு காட்டாமல் எல்லோரையும் இலங்கையர்களாகவே பார்க்கவேண்டும். இதனையே ஜனாதிபதியும் செய்யவேண்டும்.

நமது ஆட்சியில் வீட்டுத் திட்டங்களை வழங்கியிருந்தோம். ஆனாலும் கூட தற்போது வந்த அரசாங்கம் அந்த வீட்டு திட்டங்களுக்கான நிதிகளை வழங்காமல் மக்களிடம் விளையாட்டுக்களைக் காட்டி வருகின்றது.

வடக்கு கிழக்கு சார்ந்த பகுதிகளில் சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக நாங்கள் வந்து இருக்கின்றோம். அந்த வகையில் இன்று நாம் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களை சந்திக்கின்றோம். இது மிகவும் மகிழ்ச்சியானது ஆனால் தற்போது நாட்டில் ஊடகத்துறைக்கு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றது.

ஆளும் தரப்பின் அமைச்சர்கள் தற்போது நீக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு வெளியே விடப்படும் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாற்று சக்தியாக உருவாகுவதற்கு சாத்தியமில்லை.

மைத்திரிபால சிறிசேன தற்போது வரை பொதுஜன பெரமுனவில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற நபர். அவ்வாறான ஒருவர் எதிர்த்தரப்பின் பொது வேட்பாளராக வருவதற்கு சாத்தியமில்லை.

2023 நடுப்பகுதிக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்தவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும். ஆயினும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் இல்லாத பொதுவேட்பாளரை நிறுத்தும் ஆதரிக்கும் எண்ணம் கட்சிக்கு இல்லை. அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது என்றார்.

Related posts