தி.மு.க.வை சேர்ந்தவர்களே தவறு செய்தாலும் நடவடிக்கை

தி.மு.க.வை சேர்ந்தவர்கள் யார் தவறு செய்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 3 வது மற்றும் கடைசி நாள் கூட்டமானது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இன்று காலை தொடங்கிய பேரவை கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதாவை பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார்.

இதனைத்தொடர்ந்து சட்டசபையில் கூட்டுறவு சங்கங்கள் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

இதனையடுத்து, சட்டசபையில் சென்னை மாநகர காவல் சட்ட முன்வடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதன்பின்னர், சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.

அப்போது பேசிய அவர், “கவர்னர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பிலும் மனமார்ந்த நன்றி. கொரோனா தொற்று காரணமாக எல்லா உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பளிக்க இயலவில்லை” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம்.

மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்பட வில்லை. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் செயல்படுத்தப்படும். இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 5,274 பேர் பயன்பெற்றுள்ளனர். சட்ட சபையை சத்த சபையாக மாற்ற நான் விரும்பவில்லை.

தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. திமுகவை சேர்ந்தவர்கள் யார் தவறு செய்தாலும், ஒரு சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும், அண்ணா மீது ஆணையாக, கலைஞர் மீது ஆணையாக சொல்கிறேன் உறுதியாக நடவடிக்கை எடுப்பேன்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related posts