சல்மான்கானுக்கு மீண்டும் கதை எழுதிய ராஜமவுலியின் தந்தை

பாகுபலி படத்தின் மூலமாக உலக அளவில் பிரமாகி இருப்பவர், எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது திரைப்படங்களுக்கு பெரும்பாலும் கதை எழுதுபவர், அவரது தந்தை, கே.வி.விஜயேந்திர பிரசாத் தான்.

இவருக்கு தற்போது 80 வயது ஆகிறது. இந்த வயோதிக காலத்திலும் கூட அவர், கொஞ்சமும் தடுமாறாமல், ஒரு படத்திற்கான கதையை சிறப்பாக எழுதுகிறார் என்பதே வியப்புக்குரியதுதான். வருகிற 7-ந் தேதி வெளியாக உள்ள ‘ஆர்.ஆர்.ஆா்.’ படத்தின் கதை இவரது எழுத்தில் உருவானதுதான்.

தமிழ் மொழியிலும் கூட, விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்திற்கு திரைக்கதையை உருவாக்கியவர், கே.வி.விஜயேந்திர பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உரு வான ‘தலைவி’ படத்திற்கான திரைக் கதையையும் இவர்தான் அமைத்திருந்தார். இந்தி மொழியில் சல்மான்கான் நடிப்பில், 2015-ம் ஆண்டு வெளிவந்த படம், ‘பஜ்ரங்கி பைஜான்.’ இந்தப் படத்திற்கான கதையை எழுதியவரும் விஜயேந்திர பிரசாத் தான். இந்தப் படம் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.

இதையடுத்து ‘பஜ்ரங்கி பைஜான்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்று அப்போதே பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பை, சமீபத்தில் தனது 58-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சல்மான்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு ‘பவன் புத்ரா பைஜான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதையையும், கே.வி.விஜயேந்திர பிரசாத் தான் எழுதியிருக்கிறார்.

பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு, விஜயேந்திர பிரசாத்தின் கதைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ‘பஜ்ரங்கி பைஜான்’ முதல் பாகம் தயாரானபோதே, அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது எழுதப்பட்டிருக்கும் இரண்டாம் பாகம் கதைக்கு, மேலும் சில கோடிகள் வழங்கப்பட்டிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் பரபரக்கின்றன.

Related posts