உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 52

திட நம்பிக்கையுடனான எதிர்காலம் நமக்கு உண்டு.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
தளர்ந்த கைகளைத்திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள் ஏசாயா 35:3

வருடத்தின் கடைசி நாட்களுக்குள்ளும் புதியவருட ஆரம்பத்திலும் வந்து விட்ட நாம் அமர்ந்திருந்து கடந்து வந்த நமது பாதைகளை சற்றே திரும்பிப் பார்ப்போம். அப்படி நாம் எண்ணிப் பார்க்கும்போது நம் மனக் கண்களுக்கு முன்வருவது என்ன? இந்த ஆண்டில் நிறைவேறும் என்று காத்திருந்து நிறைவேறாமல்போன வேதனையும் தோல்வியும் நிறைந்த காரியங்களா? அல்லது அந்த குறைவிலும் நம்மை ஆதரித்து வந்த தேவனுடைய-கடவுளுடைய கிருபையா? (எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பறவாயில்லை))

தனது மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது என்பவனை ராஜா வாக தேவன் அபிசேகம் பண்ணினார். அவன் தேவனின் இருதயத்திற்கு ஏற்றவன் என்றும் பெயர் பெற்றான். அப்படியிருந்தும் அவனின் வாழ்வில் பல இன்னல்கள், போராட்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஆனாலும் தாவீது சோர்ந்து போகவில்லை. அதுவரை தன்னை நடத்திவந்த கர்த்தரின் வழிகளை, கிருபைகளை நினைத்து தேவனுக்கு நன்றிக்கீதம் பாடினார். கர்த்தரின் மகிமையை நினைவுகூர்ந்து மகிழ்தார். அது மட்டுமல்லாமல் என்ன நடந்தாலும் தான் விசுவாசிக்கும் கர்த்தர் தனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று விசுவாசத்தோடு அறிக்கை யிட்டு வாழ்க்கையில் வெற்றியைக்கண்டார்.

மானிடவாழ்வில் ஒவ்வொருவரும் பக்குவமடைய வேணடியது அவசிய மான தொன்றாகும். அதிலும் தேவனுடனான வாழ்வில் பக்குவமடைதல் மிக முக்கியமானதாகும். இதனை கிறிஸ்தவத்தில் விசுவாசத்தில் வளருதல் என கூறுவர். நாம் பக்குவம் அடைந்திருக்கிறோமா? இல்லையா? என்பதை எமது நடத்தை நன்கு காட்டிக்கொள்ளும்.

எப்படி? ஒருவன் எவ்வளவு கற்றுக்கொண்டாலும், அவனது பக்குவத்தை எடுத்துக்காட்டுவது கற்றுக்கொண்ட அளவல்ல. மாறாக அவன் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுக்கும்விதமே அவனது பக்குவத்தைப் புலப்படுத்தி விடுகின்றது.

அன்பான அலைகள் நேயர்களே, இதுவரை நாம் சந்தித்த பலவித தீமைகளுக்கு தேவன் – கடவுள் காரணம் இல்லை என்பது நமக்கு நன்கு தெரியும். ஆனால் நமக்கு ஓர் நம்பிக்கை உண்டு. அதுவே கிறிஸ்துவினால் நமக்கு உண்டான இரட்சிப்பு. நம்மை நாமே உணர்ந்து அவர் பாதம் சேரும்போது அவர் அருளும் விடுதலையை, வெற்றியை நாம் பூரணமாக அனுபவிக்கலாம். ஆகவே மனதை என்னவித பாரங்கள் அழுத்தினாலும் தளர்ந்து போகவேண்டாம். நமது தளர்ந்த கைகளை திடப்படுத்துவோம். தள்ளாடுகிற முழங்கால்களை பலப்படுத்துவோம். மனம்பதறுகிறவர்களை திடப்படுத்துவோம்.

செய்தபாவத்தினால் நாம் மனம் நொந்துபோயிருக்கலாம், சூழ்நிலை களின் பாதிப்பால் மனமுடைந்து இருக்கலாம். அல்லது நண்பர்களினால் வாழ்வு சூனியமாக்கப்பட்டிருக்கலாம் – இருளாக்கப்பட்டிருக்கலாம் எதுவாக இருந்தாலும் திடமனதுடன் எழுந்திருப்போம். உலகம் நம்மை பேதையர் கள் என்றாலும் நாம் கலங்கவேண்டிய தில்லை. தேவனை நம்பிவாழும் பிள்ளைகளுக்கு பெரும்பாதை ஒன்று உண்டு. அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையர்களானாலும் திசைகெட்டுப் போவதில்லை என்றெழுதப்பட்டுள்ளது. நமது வாழ்வு நிச்சயம் தேவனுக்குள் செழிக்கும்.

பிரியமானவர்களே, வாழ்க்கையில் மீண்டும் ஒரு வருடத்தை முடித்து ஓர் புதியவருடத்திற்குள் போகின்றோம். இந்த வருடத்தில் நாம் கற்றுக்கொண்ட காரியங்கள் எங்கள் வாழ்க்கையின் பக்குவத்தை எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றதா? எவ்வளவு கற்றிருக்கிறீர்கள் என்பதல்ல. மாறாக பாடுகள், சோதனைகள், துன்பங்கள், கஸ்டங்கள், பிரட்சனைகள் வரும்போது நீங்கள் எவ்விதமாக அதற்கு இவ்வருடத்தில் முகம் கொடுத்தீர்கள் என்பதே உங்கள் வாழ்க்கையின் பக்குவத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

ஆகவே இனிவரும் புதிய ஆண்டில் உங்கள் வாழ்க்கைக்குரிய பக்குவம் விளங்கும்படியாக தேவனைச் சேர்ந்துவாழ எம்மை முழுமனதுடன் அர்ப்பணிப்போம்.

அன்பின் பரலோக பிதாவே, இன்று இந்த நற்சிந்தனையை உள்ளத்தின் ஆழத்தில் இருந்து தியானித்த ஒவ்வொருவருக்காகவும் உமது பாதம் வருகிறேன். கடந்த காலங்களில் மக்கள் பட்டதுன்பங்களின் மத்தியில் உமது நாமத்தினால் அடைந்த ஆறுதலுக்காக கோடி ஸ்தோத்திரம் அப்பா. பிறக்கப்போகும் புதியஆண்டில் எமது தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் உமக்குள் பலப்படுத்தி ஓர் உன்னதமான புதியவாழ்கை வாழ கிருபை அளிக்கும்படியாக இயேசுவின் நாமத்தில் மன்றாடிநிற்கிறேன் நல்லபிதாவே, ஆமென்.

புதியஆண்டு, நம்மைச் சுற்றியிருக்கும் இருள் நீங்கும் ஒளிமயமான ஆண்டாகவும், சுபீட்சத்துடனும் சமாதானத்துடனும் வாழும் வாழ்க்கை எமக்கும் எமது தேசத்து மக்களுக்கும் அமையட்டும்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Related posts