இராணுவ ஆட்சி‌க்கு கோட்டா பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர்

நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டா பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் ஜனநாயகம் பேசினால் சிறையில் அடைக்கும் ஆட்சியின் கீழ் நாம் வாழ்கின்றோம். நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்காக, சிறையில் இருந்த தேரரை கொண்டு வந்து தனது ஆயுதமாக கோட்டா பயன்படுத்தி வருகின்றார்.

இராணுவ தளபதிகளை அமைச்சின் செயலாளர்களாக அவர் நியமித்துள்ளார். கிட்டத்தட்ட 14 அமைச்சின் செயலாளர்கள் இராணுவ தளபதிகள். அத்துடன் ஆளுநர், திணைக்கள தலைவர்களும் அவ்வாறே நியமிக்கப்பட்டுள்ளனர்.

புத்த பெருமானின் அவதாரமாக தன்னை காட்டிக்கொள்ளும் தேரர் இப்பொது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற புதிய அவாதாரத்தை எடுத்துள்ளார்.

நாம் இப்போதும் இராணுவ ஆட்சியில் தான் உள்ளோம். இது தமிழ் மக்களுக்கு மட்டும் இடி அல்ல. சிங்கள மக்களுக்கும் இது ஆபத்தானது. ஏனென்றால் 1970களில் கதிர்காமத்து அழகி மன்னம்பேரியை நிர்வாணமாக்கி கொன்றவர்கள் இராணுவத்தினர்.

பிரேமதாச காலத்திலும் சுமார் 50 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்காக அப்போது பிரேமதாசவுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச சர்வதேசம் வரை சென்றிருந்தார்.

ஆகவே, இராணுவத்துக்கு சிங்களம் தமிழ் என்ற வேறுபாடு இல்லை. துப்பாக்கி முனையில் அனைவரையும் கொல்வதே அவர்களின் நோக்கம்.

தமிழர்கள் முதலும் இராணுவ ஆட்சியில் இருந்தார்கள். அதேபோல பொருளாதார ரீதியான பிரச்சனைகளை தமிழர்கள் எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள். எனவே தமிழர்களுக்கு இது புதிதல்ல. சிங்கள மக்கள் தற்போது துன்பத்தை உணர ஆரம்பித்துள்ளனர் என்றார்.

Related posts