3-வது நாளாக உயர் அதிகாரிகள் ஆய்வு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து 3-வது நாளாக உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

முப்படை தலைமை தளபதி பலியான ஹெலிகாப்டர் விபத்து குறித்து போலீசார், விமானப் படை, ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக ஆய்வு நடத்தினர். வருவாய்த்துறை மூலம் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி நஞ்சப்ப சத்திரத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மரங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து மேல்குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். விபத்து குறித்து விசாரிக்க காவல்துறை தரப்பில் நீலகிரி சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 5 போலீஸ்காரர்கள் குழுவில் இடம் பெற்று உள்ளனர்.

அவர்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள், பொதுமக்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் வந்து 3-வது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது மேலும் விசாரணை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வருவாய்த்துறையின் மூலமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்ப சத்திரம் பகுதி வரைபடம் மூலம் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தலா ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒரு கிராம நிர்வாக உதவியாளர் சுழற்சிமுறையில் இரவு, பகலாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் வெளி நபர்கள் யாரையும் அனுமதி இன்றி உள்ளே நுழைய விடக்கூடாது.

சம்பவ இடத்தில் விமானப்படை, ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்த வந்து செல்வது குறித்தும், தற்போது நிலை குறித்தும் மாவட்ட கலெக்டர், குன்னூர் சப்-கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விபத்து நடந்த இடத்தில் இரவு, பகலாக விமானப்படையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர். நிபுணர்கள் சேகரித்து விபத்துக்கான காரணங்களை ஆராய்கின்றனர். முன்னதாக வெலிங்டன் ராணுவ மைய (எம்.ஆர்.சி.) கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.

Related posts