பொன் மாணிக்கவேல் – சோதனை சினிமா

சென்னையில் ஒரு நீதிபதி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். காவல்துறைக்கு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கச் சொல்லி மேல்மட்டத்திலிருந்து அழுத்தம் கூடுகிறது. இதனால் விடுப்பில் இருக்கும் காவல் அதிகாரியான பொன் மாணிக்கவேல் (பிரபுதேவா) இந்த வழக்கை விசாரிக்க வருகிறார். ஆனால், ஆரம்பம் முதலே இந்த வழக்கில் ஈடுபாடு எதுவுமின்றி இருக்கிறார். நீதிபதியைத் தொடர்ந்து அவரது நண்பரான மற்றொரு காவல்துறை அதிகாரியும் கொல்லப்படவே அழுத்தம் மேலும் அதிகமாகிறது. இதனைத் தொடர்ந்து நீதிபதியின் இன்னொரு நண்பரான சுரேஷ் மேனனுக்கும் கொலை மிரட்டல் வருகிறது. இதனைத் தொடர்ந்து சுரேஷ் மேனனைப் பாதுகாப்பதாக பிரபுதேவா அவரிடம் ஒரு டீல் பேசுகிறார். சுரேஷ் மேனனை அவரால் காப்பாற்ற முடிந்ததா? இந்தக் கொலைகளுக்குக் காரணம் யார்? என்பதே ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் மீதிக் கதை.

மேலே கூறியதுதான் படத்தின் கதை என்றாலும், ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே கதை தாறுமாறாக எங்கெங்கோ பயணிக்கத் தொடங்கிவிடுகிறது. படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் ஒரு கொலை, அதைத் தொடர்ந்து நடக்கும் அடுத்தடுத்த கொலைகள் என ஒரே நூலைப் பிடித்தபடி பயணித்திருக்க வேண்டிய திரைக்கதை சம்பந்தமே இல்லாத காட்சிகளால் தொடக்கத்திலேயே தொய்வடைந்து விடுகிறது.

பொன் மாணிக்கவேலாக பிரபுதேவா. காவல்துறை அதிகாரியாக அவரது அலட்சியமான தோரணையும் உடல் மொழியும் பல இடங்களில் ரசிக்க வைத்தாலும், தொடர்ந்து அதை மட்டுமே செய்து கொண்டிருப்பது உறுத்தல். தமிழ் கமர்ஷியல் படங்களின் எழுதப்படாத விதிப்படி நாயகி நிவேதா பெத்துராஜுக்கு இந்தப் படத்திலும் எந்த வேலையும் இல்லை. ஒரு பாடல் காட்சிக்கும், சில காதல் காட்சிகளுக்கும் மட்டுமே பயன்பட்டிருக்கிறார். வழக்கமாக இதுபோன்ற படங்களில் வரும் ஸ்டைலிஷ் வில்லன்களுக்கு என்ன வேலையோ அதே வேலைதான் சுரேஷ் மேனனுக்கு. ஒருசில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஈர்க்கிறார்.படத்தின் மிகப்பெரிய பிரச்சினையே

திரைக்கதைதான். ஒரு புலனாய்வு த்ரில்லர் படத்துக்குத் தேவையான குறைந்தபட்ச லாஜிக் கூட இல்லாமல் கடமைக்கு வைக்கப்பட்ட காட்சிகளால் பார்ப்பவர்களுக்கு எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை. என்னதான் போலீஸாக இருந்தாலும் நாயகன் நினைத்ததை எல்லாம் செய்வதாகக் காட்டுவதை ஏற்கமுடியவில்லை. நாயகியோ, உடன் பணிபுரியும் அதிகாரியோ யாருக்கு வில்லன்களால் ஆபத்து என்றாலும் அடுத்த நொடியே பிரபுதேவா அங்கு ஆஜராகிவிடுகிறார். படம் தொடங்கியது முதல் இறுதி வரை பிரபுதேவாவைத் தவிர மற்ற நடிகர்கள் யாருக்கும் லிப் சிங்க் ஆகவில்லை. வேற்று மொழித் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்ற உணர்வு எழுகிறது.காட்சிக்குக் காட்சி ட்விஸ்ட் என்ற பெயரில் சோதித்துக் கொண்டிருக்கும் படம் க்ளைமாக்ஸில் இன்னொரு ட்விஸ்ட்டை வைத்து மேலும் சோதிக்கிறது. படம் முடியப் போகிறது என்ற ஆசுவாசமடையும் நேரத்தில் க்ளைமாக்ஸுக்கு முன்பாக புதிதாக ஒரு வில்லனை வேறு அறிமுகப்படுத்தி திகிலூட்டுகிறார் இயக்குநர். படத்தில் ஒரே நல்ல விஷயம் என்றால் ‘மீ டூ’ இயக்கம் குறித்துக் காட்டப்பட்ட விதம்தான். அதுவும் எந்த நுணுக்கங்களும் போகிற போக்கில் வந்துவிட்டதால் பெரிதாக ஒட்டவில்லை.

டி.இமானின் இசையில் ‘உதிரா உதிரா’ பாடல் மட்டும் கேட்கும் ரகம். கே.ஜி வெங்கடேஷின் கேமரா கமர்ஷியல் படத்துக்குத் தேவையானதைக் கொடுத்துள்ளது.லாக்கப் மரணங்களுக்கும், போலீஸ் சித்ரவதைகளுக்கும் எதிரான கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில் அதை நியாயப்படுத்தும் வகையில் ஒரு படத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

20 ஆண்டுகளுக்கு முன் வந்திருக்க வேண்டிய போலீஸ் கதை தொழில்நுட்பச் சாயம் பூசப்பட்டு இப்போது வெளியாகியிருக்கிறது. சுவாரஸ்யமான அம்சங்களோ, புத்திசாலித்தனமான காட்சியமைப்புகளோ இல்லாததால் ஒருமுறை பார்ப்பதற்கே சங்கடத்தை ஏற்படுத்துகிறது இந்த ‘பொன் மாணிக்கவேல்’.

Related posts