கடந்த 5 நாட்களில் சென்னையில் மட்டும் இவ்வளவு மழையா…?

கடந்த 5 நாட்களில் சென்னையில் மட்டும் 491 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 24 இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுருளக்கோட்டில், அதிகபட்சமாக 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

7ம் தேதி முதல் இன்று வரை இயல்பைவிட அதிக மழை அளவு பதிவாகியுள்ளது. 7ம் தேதி முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒருவார மழை அளவில் இயல்பான சராசரி மழை அளவு 4 செ.மீ. ஆனால் பெய்தது 10% இது வழக்கத்தை விட 142 சதவீதம் அதிகம். சென்னையில் இந்த காலக்கட்டத்தில் எதிர்ப்பார்க்கப்பட்ட சராசரி மழை அளவு 8 செ.மீ. ஆனால் பெய்தது, 46 செ.மீ. இது 491 சதவீதம் அதிகம். அதாவது 5 நாட்களில் இவ்வளவு அதிகமாக மழை பெய்துள்ளது என கூறினார்.

சென்னையின் வடக்குப் பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் 24 மணி நேரத்தில் மொத்தம் 22.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இரவு 11 மணிக்கு இடையே புதன்கிழமை இரவு முதல் வியாழன் காலை 5 மணி வரை, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

நுங்கம்பாக்கத்தில் மொத்தம் 20.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது, இது நவம்பர் 7, 2021 அன்று பதிவான மழையை விட சற்றே குறைவு. நுங்கம்பாக்கத்திலும் புதன் இரவு மற்றும் வியாழன் அதிகாலையில் தீவிரமான காற்றழுத்தத்தால் மழை பெய்தது.

சென்னையின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளுடன் ஒப்பிடுகையில், சென்னையின் தெற்கு பகுதியில் உள்ள மீனம்பாக்கத்தில், ஒப்பீட்டளவில் குறைந்த மழையே பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை மாலை 4 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக 14.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Related posts