சஹ்ரானின் மனைவி தொடர்ந்து விளக்கமறியலில்..

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாதிமா ஹாதியா எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாதிமா ஹாதியா தொடர்பான வழக்கு இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கினை கல்முனை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்கியதுடன் குறித்த நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க அனுமதி வழங்கினார்.

இதுவரையில் கொழும்பில் நடைபெற்ற இந்த வழக்கு இன்று தொடக்கம் கல்முனை மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கான பணிப்புரையே இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.என்.அப்துல்லா உத்தரவிட்டார்.

கடந்த 29-11-2018 அன்று வவுணதீவு வலையிறவு காவலரணில் கடமையிலிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலை தொடர்பில் 2019 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதியன்று தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தற்கொலைதாரி சஹ்ரான் ஹாஷிமினின் முக்கிய சகாக்களான சஹ்ரானின் சாரதியான முஹமது சரீப் ஆதம்பாலெப்பை கபூர் (வயது 54), கம்சா முகைதீன் இம்ரான் (வயது 31) முஹமது ஆசிம் சியாம் (வயது 34) உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் தொடர்பான வழக்கினை சி.ஐ.டியினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நிலையில் தொடர்ந்து அவரை எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதான உத்தரவினை பிறப்பித்தார்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

Related posts