புனித் ராஜ்குமாரின் கடைசி நேர பரபரப்பு நிமிடங்கள்

நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவு கர்நாடகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கடைசி நேர பரபரப்பு நிமிடங்கள் குறித்து குடும்ப டாக்டர் ரமண ராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் புனித் ராஜ்குமார் தனது மனைவி அஸ்வினியுடன் நேற்று (நேற்று முன்தினம்) காலை 10.30 மணியளவில் எனது ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு அதிகப்படியான வியர்வை ஏற்பட்டிருந்தது. ஏன் வியர்வு அதிகமாக உள்ளது என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், நான் இப்போது தான் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி முடித்துவிட்டு வருகிறேன், அதனால் வியர்க்கிறது. ஆனால் எனக்கு உடல் சோர்வாக உள்ளது, என்ன என்று தெரியவில்லை என்று கூறினார்.

அவர் எப்போதும் உடல் சோர்வாக இருக்கிறது என்று கூறி என்னிடம் வந்தது இல்லை. முதல் முறையாக அவர் என்னிடம் இவ்வாறு கூறினார். ஆனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு இ.சி.ஜி.(இதயத்துடிப்பு) பரிசோதனை செய்தேன். அதில் அவரது இதய செயல்பாட்டில் சிறிது மாறுபாடு இருந்தது. ஆனால் அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. உடனே ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்று நான் அறிவுறுத்தினேன். அதற்காக முன்கூட்டியே ஒரு மருத்துவ குழுவை தயாராக வைக்கும்படி விக்ரம் மருத்துவமனைக்கு தெரிவித்தேன்.

அடுத்த 5 நிமிடத்தில் அவர் விக்ரம் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவருக்கு ஏற்பட்டது மாரடைப்பு கிடையாது. மாரடைப்பு ஏற்பட்டால், அதனால் அதிகப்படியான வலி ஏற்படும். ஆனால் அவருக்கு வலி இருக்கவில்லை. “கார்டியாக் அரெஸ்ட்” அதாவது இதய துடிப்பே நின்றுபோவது. அது தான் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அவர் ஒரு சாதாரண நபர் கிடையாது. தினசரி உடற்பயிற்சி செய்வது, நடைபயிற்சி செய்வது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதில் அக்கறை செலுத்தினார். உடல் ஆரோக்கிய விஷயத்தில் அவர் எப்போதும் அலட்சியம் காட்டியது இல்லை. அவருக்கு இத்தகைய பிரச்சினை இருக்கும் என்ற சந்தேகம் யாருக்கும் ஏற்படவில்லை. அந்த அளவுக்கு அவர் ஆரோக்கியமாக இருந்தார்.

அவருக்கு திடீரென இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எங்கள் ஆஸ்பத்திரியில் அவர் மயங்கி விழவில்லை. பரிசோதனையின்போது, அவரது இதய துடிப்பு சரியாகவே இருந்தது. பரிசோதனைக்கு பிறகு அவர் நடக்க சிரமப்பட்டார். என்னிடம் பேசும்போது சரியாகவே பேசினார். காரில் அழைத்து செல்லுமாறு கூறினேன். காரில் செல்லும்போது தான் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று ரமணராவ் கூறினார்.

Related posts