பிரதமர் மோடி: அமித் ஷா பெருமிதம்

நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், தற்சார்பு மற்றும் இந்தியாவில் தயாரிப்பது என ஒவ்வொரு துறையிலும் புதிய முயற்சிகளை நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
குஜராத் கெவாடியாவில் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சி: மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்பு.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளில், குஜராத் கெவாடியாவில் நடந்த தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் ஒற்றுமை சிலை அமைந்துள்ள இடத்தில், அமித்ஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய வீடியோ தகவல் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:
நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் மற்றும் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய பாரம்பரியத்தை நாம் முன்னெடுத்து செல்கிறோம்.
நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை விடுதலையின் அம்ரித் மகோத்ஸவமாக கொண்டாட பிரதமர் முடிவு செய்துள்ளார். இதை நாம் கொண்டாடும் வேளையில், தேசிய ஒற்றுமை தினம் இந்தாண்டு பலவிதமான முக்கியத்துவத்தை பெறுகிறது.
துடிப்பான, வளர்ச்சியடைந்த, செழிப்பான, பாதுகாப்பான, பண்பட்ட மற்றும் கற்றறிந்த இந்தியாவை உருவாக்கும் தீர்மானத்தை நரேந்திர மோடி நம்முன் வைத்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், தற்சார்பு மற்றும் இந்தியாவில் தயாரிப்பது என ஒவ்வொரு துறையிலும் புதிய முயற்சிகளை நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார்.
சர்தார் படேலின் வாழ்க்கை அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. சுதந்திர இந்தியாவை பல பகுதிகளாக பிரிக்க திட்டமிட்டவர்களின் எண்ணங்களை முறியடித்து ஒருங்கிணைந்த இந்தியாவை சர்தார் படேல் உருவாக்கினார்.
அவரது வாழ்க்கை, ஆளுமை நம்மை எப்போது ஊக்குவிக்கிறது மற்றும் வழிகாட்டுகிறது. சர்தார் படேலின் நடவடிக்கையால்தான் நாம் ஒருங்கிணைந்த இந்தியாவை பார்க்கிறோம்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Related posts