இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி – ராகுல்காந்தி

நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு முக்கிய நபர்களின் தொலைபேசி உரையாடல்களை இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ என்ற மென்பொருளை பயன்படுத்தி மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரம் குறித்த உண்மையை கண்டறிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல்காந்தி கூறியதாவது:-

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பெகாசஸ் விவகாரத்தை நாங்கள் எழுப்பினோம். சுப்ரீம் கோர்ட்டு இன்று தனது கருத்தை தெரிவித்துள்ளது. நாங்கள் என்ன கூறியிருந்தோமோ அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நாங்கள் 3 கேள்விகளை எழுப்பியுள்ளோம். ‘பெகாசஸ்’ மென் பொருளை அங்கீகரித்தது யார்? இது யாருக்கு எதிராக பயன்படுப்பட்டுள்ளது நமது மக்களின் தகவல்களை பிற நாடுகள் பெற்றுள்ளனவா?

’பெகாசஸ்’ இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி. இந்த விவகாரத்தை விசாரிக்க உள்ளோம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பது மிகப்பெரிய நடவடிக்கையாகும். இந்த விவகாரத்தில் உண்மையை தெரிந்துகொள்வோம் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

‘பெகாசஸ்’ ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த விவகாரத்தை நாங்கள் மீண்டும் பாராளுமன்றத்தில் எழுப்புவோம். பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த முயற்சிப்போம். ‘பெகாசஸ்’ விவகாரம் குறித்து விவாதம் நடத்த பாஜக விரும்பாது என்பது எனக்கு நிச்சயம் தெரியும்.

‘பெகாசஸ்’ முதல்-மந்திரிகள், முன்னாள் பிரதமர்கள், பாஜக மந்திரிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்த் பெறப்பட்ட தகவல்களை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி பெற்றனரா?. தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டு அந்த தகவல்கள் பிரதமருக்கு செல்லுமானால் அது குற்ற செயலாகும்’ என்றார்.

Related posts