வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் புழல் சிறையில்

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்த நிலையில் அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த, வீ.நிமலதாஸ் மற்றும் த. கஜீபன் ஆகிய இரு மீனவர்களையும் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இரு மீனவர்களும் கடந்த 21ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையில் இருந்து சென்ற நிலையில், இந்திய கோடியக்கரைக்கு கிழக்கே 16.5 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தாம் கைது செய்ததாக இந்திய கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரு மீனவர்களும், வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழு ஆய்வாளர் ஊடாக வேதாரண்யம் கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் இருவரையும் நேற்று முன்தினம் சனிக்கிழமை வேதாரண்ய பொலிஸார் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்று, இரு மீனவர்களையும் எதிர்வரும் 1ஆம் திகதி வரையில் புழல் சிறையில் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளது.

Related posts