உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் எதிர்கொண்ட கேலி

உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் எதிர்கொண்ட கேலிகள் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ஆன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் பிரியங்கா சோப்ரா கூறியுள்ளதாவது..
திரைத்துறையில் வளர்ந்ததால் என்னுடைய உடல் அமைப்பு எப்படி இருக்கிறது என கூர்ந்து கவனிக்கப்பட்டேன். அப்போது நான் என்னுடைய 20களில் இருந்ததால் அது மிகவும் சாதாரணமான ஒன்று நினைத்தேன். பெரும்பாலான இளம்பெண்களைப் போலவே அழகின் உண்மையற்ற மதிப்பீடுகளான போட்டோஷோப் செய்யப்பட்ட முகம், சீரான தலைமுடி ஆகியவற்றை நானும் விரும்பினேன். பல வருடங்களாக என்னுடைய இயற்கையான நிறத்தை நான் பயன்படுத்தவே இல்லை.
இது எனக்கு ஒரு மிகப்பெரிய பயணம் என்று நினைக்கிறேன். ஏனெனில் சினிமா உலகில் வளர்ந்த என்னை நோக்கி அதிவேகத்தில் வீசப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் நான் கற்றேன். அது எனக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை ஆழ்ந்து நோக்க எனக்கு நேரம் இருக்கவில்லை.
என் உடலில் மாற்றம் ஏற்பட்டபோதுதான் நான் அதைப் பற்றி சிந்திக்க தொடங்கினேன். நான் என் உணர்வுகளை விழுங்கிக் கொண்டிருந்தபோது என் உடல் மாற்றமடைய தொடங்கியது. நான் என்னுடைய 30களை நெருங்கிக் கொண்டிருந்தேன். நான் போராட்டங்களை எதிர்கொண்டிருந்தேன். ஏனெனில் ‘நீங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு வயதாகிறது’ என ஆன்லைனில் மக்கள் என்னை கேலி செய்து வந்தனர். அந்த கட்டத்தில் அது மனதில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. என் மனம் ஏற்கெனவே ஒரு இருண்ட இடத்தில் இருந்து கொண்டிருந்ததால் எனக்கு அதற்கு நேரம் இல்லை. சமூக ஊடகங்களுடனான என்னுடைய உறவு மாறியது. இணையத்துடனான என்னுடைய உறவு மாறியது. என்னை நானே பாதுகாத்துக் கொண்டேன். என் உடலுக்கு எதெல்லாம் தேவையோ அவற்றை கொடுத்தேன். அது நள்ளிரவு 1 மணிக்கு பீட்சா சாப்பிடுவதாக இருந்தாலும் சரியே.
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

Related posts