உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 39

தேவனும் மறுபடியுமான சந்தர்ப்பம்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

குயவன் வனைந்து கொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப் போயிற்று, அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க்கண்டபடி குயவன் அதைத்திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான். எரேமியா 18:4

இந்தமாதம் ஐக்கியநாடுகள் சபையின் கூட்டங்கள் நடைபெற்றுவருவதனால் தமிழ் மக்கள் அனைவரும் இந்த கூட்டத்தின்மூலம் அமைதியை, ஆறுதலை, சுபீட்சத்தைப் பெற்றுவாழ வழிபிறக்கவேண்டும் என்று காத்திருப்பார்கள். ஆகவே நாம் அனைவரும் ஒருமனதோடு தேவன் உதவி செய்யும்படியாக பிராத்திப்போம்.

அன்பின் பரலோக பிதாவே, நாம் யாவரும் ஒரு மனதோடு எமது தேசத்திற்காக உம்மை நோக்கிப் பார்க்கிறோம் அப்பா. இந்த கூட்டத்தொடரின்மூலம் எமது தேசமும் மக்களும் அமைதியை, ஆறுதலை, சுபீட்சத்தைப் பெற்று வாழ உதவி செய்யும் அப்பா. இதுவரை காலமும் தேசமும் மக்களும் அடைந்த சிறுமையில் இருந்து உமது நாமத்தினால் ஓர் நிதந்தர சமாதானத்துக்கான வழி பிறக்கட்டும். அமைதியும் சமாதானமும் தேசத்தையும் மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தட்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமென்.

இன்றைய நற்சிந்தனையை விளங்கிக்கொள்ள கீழ்வரும் வேதப்பகுதியை மிக தெளிவாக தியானிப்போம். கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம், நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ, அங்கே என்வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்.

இதோ, அவன் திரிகையினாலே வனைந்து கொண்டிருந்தான். குயவன் வனைந்து கொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று, அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன்பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்.

அப்பொழுது கர்த்தருடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர், இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார், இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள். எரேமியா 18:1-6.

நமது அருமை ஆண்டவர் எகிப்தில் சிறைபிடிக்கப்பட்டு, அடிமைப்பட்டு வாழ்ந்து வந்த இஸ்ரவேல் மக்களை தமது மகாபெரிய கிருபையால் மீட்டு, மீண்டுமாக பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்திற்கு அழைத்து வந்தார்.

அவர்கள் தங்கள் அடிமைத்தனத்தில் இருந்த போது தேவனை நோக்கி தினமும் தமது வேதனையை கதறினார்கள். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.

தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார். தேவன் அவர்களை நினைத்தருளினார். யாத்திராகமம் 2:23-25.

தேவன் அவர்களை தமது ஓங்கிய புயத்தால் விடுவித்து அவர்களுக்கு புதிய வாழ்கை அளித்து, பல அரசர்களைக் கொண்டு அவர்களை ஆண்டு வந்தார். அந்த வேளையில் மக்கள் தேவனை விட்டுப்பிரிந்து, அவரின் கட்டளைகளுக்கு கீழ்படியாமல், தமது சுயவிருப்பத்திற்கு ஏற்ப வாழ்ந்து வந்தார்கள். அதனால் தேவன் தந்த தேவபராமரிப்புடன்கூடிய அமைதியான, ஆறுதலான, ஆசீர்வாதமான வாழ்க்கையை இழந்து பாபிலோனுக்கு மீண்டும் சிறைப்பட்டுப் போனார்கள்.

அந்த சிறையிருப்பின் வேளையில் அவர்கள் மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா? மறுபடியும் நாம் இஸ்ரவேல் தேசத்திற்குப் திரும்பமுடியுமா? அங்கு நாம் காலூன்றி நிற்க முடியுமா? தேசத்தை சுதந்தரித்து வாழ முடியுமா? என்பதே அவாகளின் நம்பிக்கையற்ற நிலையாக இருந்தது. (இன்றும்கூட சோவியத் ரூசீயாவிலும் அதனைச்சுற்றி இருக்கும் நாடுகளில் இருந்து யூதர்கள் மீண்டும் இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பிப் போவதை நாம் காணக்கூடியதாக உள்ளது)

மீண்டும் அவர்கள் தேவனை நோக்கி கண்ணீரோடு இவ்வாறு மன்றாடினார்கள். இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண், நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியைகள் என்று சொல்லி தங்களைத் தாழ்தினார்கள். ஏசாயா 64:8.

நமது அருமை ஆண்டவர் தேவ பராமரிப்பை இழந்து தவிப்புடன் வாழ்ந்த இஸ்ரவேலரின் வாழ்க்கையில் மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்து அவர்களை வாழ வைக்க கிருபை உள்ளவராக இருந்தார். கர்த்தர் மனதுருகினார். மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க சித்தமானார். தமது தீர்க்கதரியான எரேமியாவை குயவனுடைய வீட்டிற்கு அனுப்பினார். அங்கே குயவன் வனைந்து கொண்டிருந்த மட்பாண்டம் அவன் கையில் கெட்டுப்போயிற்று. வச.1-4.

தேவன் தீர்க்கதரிசிக்கு அவன் கண்ட காட்சியை விபரிக்கிறார். இஸ்ரவேல் மக்கள்தான் களிமண்ணினாலான மட்பாண்டம். குயவனாக இருப்பவர்தான் வாழ்க்கையை வனைகிற கர்த்தராகிய தேவன். நான் அவர்களை வனைந்து உருவாக்கிய போது, அவர்கள் எனக்கு (தேவனுக்கு) செவிகொடாமல், கட்டளைக்கு கீழ்படியாமல், சுயம் விரும்புகிற வழியில் போய் அடிமைப்பட்டுப் போனார்கள்.

குயவன் கெட்டுப்போன மட்பாண்டத்தை தூக்கியெறிந்து விடவல்லை. மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தான். தன்பார்வைக்கு சரியாய்கண்டபடி குயவன் அதை திரும்ப வேறுபாண்டமாக வனைந்தான். வச.4. அதே போல நானும் (தேவனும்) அவர்களின் வாழ்க்கையில் இரக்கம் பாராட்டி மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வல்லமை உள்ளவராக இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தினார்.

தேவனுக்குப் பிரியமான மக்களே, இன்று இந்த இஸ்ரவேலரைப் போல நாங்களும் எமக்கு ஆறுதல் கிடைக்குமா? எனது நோய் என்னை விட்டு அகலுமா? எனது குடும்பத்தில் அமைதியை சமாதானத்தை காணமுடியுமா? குழந்தைப் பாய்கியத்தை பெற்றுக்கொள்ள முடியுமா? வாழ்கையின் வெறுமை வெறுப்பில் இருந்து எனக்கு ஆறுதல் கிடைக்குமா? பாவத்தின் கொடுரத்தில் இருந்து ஆறுதல் கிடைக்குமா? என பல வேதனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

இன்று இப்போதே உணர்ந்துகொள் தேவன் உன்னை விடுதலைப்படுத்தி, உனக்கு ஆறுதலைத்தர மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் தருகிறார் என்று. இந்த வேளையில் அவரின் இரக்கத்திற்குள் வந்து சேர்ந்து கொண்டு ஆறுதலைப் பெற்றுக்கொள்.

தேவ தூதனும் பாவம் செய்தான், மனிதனும் பாவம் செய்தான். தேவ தூதர்களுக்கு மறுபடியும் இரக்கம் கிடைக்கவில்லை. இதை நாம் வேதத்தில் கண்டுகொள்ளலாம். தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக் கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட து}தர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார். யூதா 1:6.

ஆனால் மனிதனுக்கோ கர்த்தருடைய கண்களில் மீண்டும் இரக்கம் கிடைத்தது. கர்த்தர் மறுபடியும் ஓர் சந்தர்ப்பம் கொடுத்தார். பாவத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த மக்களை தேவன் சிலுவை மரத்திலே தன் ஜீவனைக் கொடுத்து பாவமன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் கிருபையாய்த் தந்தருளினார்.

அதே தேவன் இன்று எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் தருகிறார். ஆகவே இந்த சந்தர்ப்பத்தை எமது தேசத்தின் விடுதலைக்கான வேளையாக மாற்றும் படியாகவும், தனிப்பட்ட எங்கள் வாழ்வின் விடுதலைக்கான, ஆறுதலுக்கான ஓர் வேளையென நினைத்து தேவனிடம் எங்களை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபம். அன்பின் பரலோக பிதாவே, இன்று உமது இரக்கத்தின் ஐசுவரியத்தை எனக்கு அறியப்பண்ணியதற்காக உமக்கு நன்றி அப்பா. நீர் மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்து எங்கள் தேசத்தையும், எங்களையும் உமது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு, உமது செட்டையின் நிழலின் பாதுகாப்பில் தேசமும் நாமும் வாழ வைத்ததற்காக உமக்கு நன்றி அப்பா. வெறுத்து ஒதுக்கப்பட்ட பாத்திரமாக இருந்த எங்களை உமது அன்பின் கரத்தால் புதிய பாத்திரமாக வனைந்து, பாதுகாத்து வழி நடத்தும் பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Related posts