முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி (55). அதிமுக ஆட்சியில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக அமைச்சராக வலம் வந்தவர். சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை என, 5 துறைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சொந்த தொகுதியான ஜோலார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிட்ட கே.சி.வீரமணி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தேவராஜிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தபோது கே.சி.வீரமணி, வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
திமுக ஆட்சியமைத்த உடன் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், இடையம்பட்டி காந்தி ரோட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டுக்கு இன்று காலை 5.50 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜதாஸ் (ஈரோடு) தலைமையில் 8 அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அங்கு வந்தனர்.வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை எழுப்பி ‘ரெய்டு’ நடத்த வந்ததாகக் கூறி, முன்பக்கக் கதவு, நுழைவு வாயில், பின்வாசல் கதவு ஆகியவற்றை இழுத்து மூடி சோதனையில் ஈடுபட்டனர். கே.சி.வீரமணி வீடு மட்டுமின்றி அவரது சகோதரர்கள் கே.சி.காமராஜ், கே.சி.அழகிரி மற்றும் வீரமணியின் ஆதரவாளர்களான நகரச் செயலாளர் சீனிவாசன் வீடு, ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ் வீடு, உதவியாளர் ஆர்.ஆர். ரமேஷ் வீடு, நாட்றாம்பள்ளி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் மல்லகுண்டா ராஜா வீடு மற்றும் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான திருப்பத்தூர் மற்றும் ஏலகிரி மலையில் உள்ள ‘ஓட்டல் ஹில்ஸ்’, ஜோலார்பேட்டையில் உள்ள திருமண மண்டபம், பீடி தொழிற்சாலை, திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள உறவினர் வீடு, குடியாத்தம் பகுதியில் வீரமணிக்குச் சொந்தமான வேளாண்மைக் கல்லூரி உள்ளிட்ட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதை அறிந்த வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில், அதிமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கே.சி.வீரமணி வீடு முன்பு குவிந்தனர்.
திமுக அரசைக் கண்டித்து அதிமுக நிர்வாகிகள் கே.சி.வீரமணி வீட்டின் முன்பாக தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை, வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மறைக்கவே திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் இந்த ரெய்டு நடத்தி வருவதாக, குற்றம் சாட்டி அதிமுக நிர்வாகிகள் திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, திருப்பத்தூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Related posts