சொகுசு காருக்கான நுழைவு வரியை செலுத்தினார் நடிகர் விஜய்

கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை நடிகர் விஜய் வாங்கினார். கார் வாங்கும்போதே இறக்குமதி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தப்பட்டிருக்கின்றன. இந்த காரின் விலை 2012-ல் 2.25 கோடி ரூபாய். இதனை சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்த போது காருக்கான நுழைவு வரி செலுத்த வேண்டும் எனவும் அதன் பின்பே காரை பதிவு செய்து பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், காரின் விலையை விட இறக்குமதி வரி, சாலை வரி மற்றும் இன்ன பிற விஷயங்கள் என சேர்த்தால் வரி காரின் விலையை விட அதிகமாக இருந்ததால் (கிட்டத்தட்ட 6 கோடிக்கும் மேல்) நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதே ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மதிப்பில் ஏற்கனவே 20% இறக்குமதி வரி செலுத்திவிட்டதால் நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் வழக்கை தள்ளுபடி செய்ததுடன் வரிவிலக்குக்கு தடை கேட்டதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வரியையும் கட்ட சொல்லியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் மனுதாக்கல் செய்தார். பின்னர் நடிகர் விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. காருக்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரியை ஒரு வாரத்திற்குள் செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நடிகர் விஜய் தரப்பில் அஜரான வழக்கறிஞர், வணிக வரித்துறையினர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டால் அதனை செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய் சொகுசு காருக்கான நுழைவு வரியை செலுத்தி விட்டதாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட்டு ஒத்தி வைத்தது.

Related posts