காபூல் விமான நிலையம் மூடப்பட்டது

காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துளது.

ஆப்கன் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளையும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

மக்கள் கூட்டம் அலைமோதியதையடுத்து கூட்டத்தை தவிர்க்கும் வகையில், காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. காபூல் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து விமான சேவையையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இன்று பிற்பகல் 12.30 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பவிருந்த ஏர் இந்தியா விமானம் கிளம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர் காபூல் நகரம் தங்கள் வசமானதை தொடர்ந்து, வன்முறையை உடனடியாக நிறுத்தும்படி போராளிகளுக்கு தலீபான் அமைப்பு உத்தரவு பிறப்பித்தது. ஆப்கான் ராணுவ வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

விமான நிலையங்கள், மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என்றும், அவற்றுக்கான வினியோகம் நிறுத்தப்படாது என்றும் தலீபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது‌.

அதேபோல் வெளிநாட்டவர்கள் விரும்பினால் காபூலை விட்டு வெளியேறலாம் அல்லது அவர்கள் தொடர்ந்து காபூலில் இருக்க வேண்டுமெனில் தங்களை தலீபான் அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தலீபான்கள் அறிவித்தனர்.

எனினும் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதால் பீதியடைந்த உள்ளூர் அரசு அதிகாரிகள் அனைவரும் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக விமான நிலையங்களில் குவிந்துள்ளனர். அதேபோல் காபூல் நகரை சேர்ந்த பொதுமக்களும் உயிருக்கு பயந்து அண்டைநாடான பாகிஸ்தானை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அந்நாட்டு மக்களையும், வெளிநாட்டவர்களையும் செல்வதற்கு எந்த இடையூறும் இன்றி அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 60 நாடுகள் வலியுறுத்தியுள்ளன. சாலைகள், விமான நிலையங்கள் என அனைத்து வகையான போக்குவரத்து பாதைகளும் தொடர்ந்து திறந்தே இருக்க வேண்டும் என்றும் அந்த நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

Related posts