இலங்கையில் மேலும் 160 மரணங்கள் பதிவு..

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 160 மரணங்கள் நேற்று (13) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 5,775 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 160 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 5,935 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 160 பேரில், 87 பேர் ஆண்கள், 73 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

——-

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒந்தாச்சிமடம் பகுதியில் வைத்து கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்படுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய, விஜேராசா பிராசந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் களுவாஞ்சிக்குடி முகாமுக்கு கிடைத்த தகவலுக்கமைய, அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும்வேளை நேற்றையதினம் (13) காலை 10.30 மணியளவில் விசேட அதிரடி படையினரால் குறித்த சந்தேகநபரை சோதனைக்கு உட்படுத்தபடுத்தியபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைது செய்யப்பட்டவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைகுண்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினர், மேலதிக விசாரணைகளுக்காக களுவாஞ்சிகுடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் சமிக்ஞை பிரிவின் உறுப்பினராக இருந்தவர் என, களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர், கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்திலிருந்த LTTE முகாமில், கந்தர ராம் எனும் LTTE பிரதேச தலைவர் ஒருவரின் கீழ் ‘ஆழ்வான்’ எனும் பெயரில் இயங்கி வந்தவர் எனவும், பின்னர் அவர் LTTE அமைப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

ஆயினும் குறித்த நபர் புனர்வாழ்வளிக்கப்படாத ஒருவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதுடன், குறித்த கைக்குண்டை வைத்திருந்தமை, ஏதேனும் நாச காரியத்திற்கு பயன்படுத்தவா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts