முதல் பார்வை: துணிந்த பின்

வீரம் என்ற உணர்வை வைத்து ‘துணிந்த பின்’ என்ற கதையை இயக்கியுள்ளார் சர்ஜுன்.
ஒரு காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் சண்டையிடுகிறார்கள். அதில் புதிதாக ராணுவத்தில் சேர்ந்துள்ள அதர்வாவும் இருக்கிறார். அந்தச் சண்டையில் நக்சலைட் கும்பலைச் சேர்ந்த கிஷோர் பிடிபடுகிறார். குண்டடிபட்ட அவரை அதர்வா தனியாக மருத்துவமனைக்குக் கொண்டுபோகும் சூழல் அமைகிறது. ஆனால், மருத்துவமனைக்குப் போக 30 கி.மீ. தூரம் இருக்கிறது.இந்தப் பயணத்தில் என்ன ஆனது, இன்னொரு பக்கம் தனது கணவரைத் தேடிக்கொண்டிருக்கும் அஞ்சலி யார் என்பதுதான் கதை.
அதர்வா, கிஷோர், அஞ்சலி மூவருமே இந்தக் கதைக்குச் சரியாகப் பொருந்தியிருக்கிறார்கள். சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு, காட்டுப் பகுதி, அதைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகைக் காட்டும் காட்சிகளில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.ஒரு போராளி கதாபாத்திரம், அரசாங்கத்தில் பணிபுரியும் நபருடன் பயணிக்கிறார். இந்தப் பயணம், இவர்களுக்கு நடக்கும் பேச்சுவார்த்தையில் அந்த ராணுவ வீரர் மனம் மாறிவிடுவாரா அல்லது நடுவில் யாரேனும் வந்து அந்தப் போராளியைக் காப்பாற்றிவிடுவார்களா, அதர்வா என்ன செய்யப்போகிறார் என்று பல விஷயங்கள் இந்தக் கதையைப் பார்க்கும் போது நமக்குத் தோன்றுகிறது. ஆனால், மணிரத்னமே எழுதியிருக்கும் இந்தக் கதையில் அவ்வளவு யோசனைகள் இல்லை என்பது கதை முடியும்போதுதான் நமக்குத் தெரிகிறது.
கிஷோர் சில புரட்சிகரமான விஷயங்களைப் பேசுகிறார், அதற்கு அதர்வா பதில் சொல்கிறார். இதெல்லாம் சரி, அடுத்தது என்ன, இதில் வீரம் என்கிற உணர்வை எந்த விதத்தில் சொல்ல வருகிறார்கள் என்பது புரியவில்லை.கிஷோர் கதாபாத்திரம் பேசும் வசனம் வீரத்துக்கு உதாரணம் என்று கொண்டாலும், ராணுவத்துக்கு ஒருவர் வருவதே வீரம்தானே. கொஞ்சம் மிரட்சியில் இருந்தாலும் அதர்வா தைரியமாக சண்டை போடுகிறார். ஒரு நக்சலைட் ஏற்கெனவே சுட்டுவிட்டார், ஆனால் மீண்டும் சுட ஏன் கண்ணை மூடி பொறுமை காக்க வேண்டும்? கடைசியில் அவர் எடுக்கும் அந்த முடிவுதான் வீரத்துக்கான அடையாளமா? எனப் பல கேள்விகள் இந்தப் படம் பார்க்கும்போது தோன்றுகிறது. இந்தப் பகுதியில் முழுமையாக எதுவும் கையாளப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

Related posts