சிறுமி ஹிஷாலினியின் மரண விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் ‘ என் சாவுக்கு காரணம் ‘ என்று எழுதப்பட்டுள்ளமை விசாரணைக்குழுவினரால் இனங்காணப்பட்டுள்ளது. ஆங்கில எழுத்துக்களில் தமிழ் அர்த்தம் கிடைக்கப் பெறும் வகையில் காணப்படும் இந்த வசனம் சிறுமி ஹிஷாலினியால் எழுத்தப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவர் உபயோகித்த பாடப்புத்தகங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணை குழுக்களால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது, உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் சுவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, ஆங்கில எழுத்துக்களில் தமிழ் அர்த்தம் கிடைக்கப் பெறும் வகையில் ‘ என் சாவுக்கு காரணம் ‘ என்று எழுத்தப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இவ்வாறு எழுதப்பட்டுள்ள சுவர், புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பகுதி நேற்று திங்கட்கிழமை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கையெழுத்து தொடர்பான விசேட நிபுணர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சிறுமி பாடசாலை சென்ற போது உபயோகித்த பாடசாலை புத்தகங்கள் சில பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சிறுமி வசித்த அறையின் சுவரில் எழுதப்பட்டிருந்த வசனம் அவரால் எழுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக இவ்வாறு பாடப்புத்தகங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

மூவரடங்கிய விசேட நீதிமன்ற மருத்துவ குழுவினால் இரண்டாவது பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கை வழங்கப்படவுள்ளது. அத்தோடு குறித்த வீட்டில் இதற்கு முன்னர் பணியாற்றிய ஏனைய பெண்களிடம் சகல வாக்குமூலமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாக்குமூலங்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

——-

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் பல சிக்கல்களை ஏற்படுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார்.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சிறுமியின் மரணம் தொடர்பான தகவல்கள் விசாரணைகளைத் தடுப்பதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்கள் தொடர்பான அறிக்கையை அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அதனையடுத்து அவற்றில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.
சம்பவமொன்று தொடர்பில் வழக்கு தொடரப்பட்ட பின்னர் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து கருத்துக்களை அல்லது நிலைப்பாடுகளை தெரிவிப்பத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் சகலருக்கும் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
எனவேதான், இது தொடர்பில் நீதி அமைச்சு மற்றும் ஊடக அமைச்சுக்கிடையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் அல்லது இரு வாரங்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை நாம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Related posts