மீண்டும் ஓ.டி.டி. தளத்துக்கு மாறும் திரைப்படங்கள்

கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்து உள்ளது.

இதனால் திரைப்படத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில் தற்போதைய ஊரடங்கு காரணமாக தியேட்டர்களில் தினமும் இரவு காட்சிகளை ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தியேட்டர்களுக்கு அதிக கூட்டம் வரும். அன்று முழு ஊரடங்கை அமல்படுத்துவதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் இனிமேல் புதிய படங்களை தயாரிப்பாளர்கள் திரையிட முன்வர மாட்டார்கள் என்றும் தியேட்டர் அதிபர்கள் தரப்பில் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தயாரிப்பாளர்கள் கவனம் மீண்டும் ஓ.டி.டி. தளங்கள் பக்கம் திரும்பி உள்ளது. திரைக்கு வர தயாராக இருக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஷாலின் மதகஜ ராஜா உள்ளிட்ட மேலும் பல படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

சசிகுமார், சமுத்திரக்கனி நடித்து வருகிற 23-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்த எம்.ஜி.ஆர். மகன் படத்தின் ரிலீசை கொரோனா காரணமாக தள்ளி வைத்து இருப்பதாக பட நிறுவனம் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே சூர்யா நடித்துள்ள சூரரைபோற்று, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின், அனுஷ்காவின் நிசப்தம், வரலட்சுமி சரத்குமாரின் டேனி உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன.

Related posts