நடிகர் அதர்வாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நடிகர் அதர்வாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில். மறைந்த நடிகர் முரளியின் மகனான நடிகர் அதர்வாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் நான் குணம் பெற்று பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன்” என்று அதர்வா பதிவிட்டுள்ளார்.

—–

தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக நடிகர் சோனு சூட்டு டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டும் கொரோனா நெருக்கடி காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். மேலும், அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார்.

இவற்றோடு கல்வி உதவித்தொகை, ஸ்மார்ட்போன்கள், மொபைல் டவர் அமைப்பு என பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாகத் தொற்று எண்ணிக்கை இந்தியா முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் மும்பையில் வசித்து வரும் பல பாலிவுட் பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரன்பீர் கபூர், ஆலியா பட், ஆமிர் கான், கோவிந்தா, அக்‌ஷய் குமார், கேத்ரீனா கைஃப் உள்ளிட்ட நடிகர்கள் கடந்த வாரங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது சோனு சூடுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது குறித்து டுவிட்டரில், “கோவிட்-19 தொற்று உறுதி. மன நிலை அதை விட உறுதியாக இருக்கிறது. அனைவருக்கும் வணக்கம், இன்று காலை எனக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் ஏற்கனவே என்னைத் தனிமைபடுத்திக் கொண்டு விட்டேன். அதிக அக்கறையோடு இருக்கிறேன். ஆனால் கவலை வேண்டாம். உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இது எனக்கு அதிக நேரத்தைத் தந்திருக்கிறது. உங்களுக்காக நான் என்றும் இருப்பேன் என்பதை மறக்காதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

Related posts