யாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம், மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்டினால் கடந்த 2 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமர்ப்பணத்தின் போது, அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டு முதலாவது வாசிப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தது.

மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு எதிராக வாக்களித்தனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Related posts