முதல் பார்வை: வி பழிவாங்கல் கதை

காவல்துறை அதிகாரிக்கும், கொலைகாரனுக்கு இடையே நடக்கும் போட்டி தான் ‘வி’
தொடக்கத்தில் ஒரு கலவரத்தைக் கட்டுப்படுத்தக் களமிறங்குகிறார் சுதீர் பாபு. அந்தக் கலவரத்தை அடக்கி ஒடுக்கியவுடன் பலரும் அவரைப் பாராட்டி விருதுகள் எல்லாம் கொடுத்து ‘சூப்பர் போலீஸ்’ என்று கொண்டாடுகிறார்கள். ஆனால், அவருக்குச் சவால் விடுத்து கொலைகள் செய்யத் தொடங்குகிறார் நானி. அடுத்த கொலைகளுக்கான க்ளூவையும் விட்டுவிட்டுப் போகிறார். சுதீர் பாபு க்ளூவை யோசித்துப் போவதற்குள் கொலை செய்துவிட்டு, அடுத்த கொலைக்கு க்ளூ கொடுக்கிறார். நானி ஏன் கொலைகள் செய்கிறார், சுதீர் பாபு நானியை எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் கதை.
இந்தக் கதையைப் படிக்கச் சுவாரசியமாக இருக்கிறது அல்லவா. ஆனால், இதை நீங்கள் திரையில் பார்க்கும் போது அடுத்து இப்படிப் போகுமே என்று நினைக்கும்போது அப்படியே நடக்கிறது. ஒரு கட்டத்தில் ஒவ்வொரு முறையும் நானியைத் தவறவிட்டு சுதீர் பாபு படும் கோபம் நமக்கும் வருகிறது. ஏனென்றால் இதுவரை பார்த்த பழிவாங்கல் கதையில் இருக்கும் விஷயங்களே இந்தப் படத்தில் இருக்கிறது. ஒரு சில காட்சிகளைத் தவிர்த்து திரைக்கதையில் எந்தவொரு சுவாரசியமுமே இல்லை. இயக்குநர் மோகன கிருஷ்ணா இதில் மெனக்கிட்டு இருக்கலாம்.நானியின் 25-வது படம். தனக்கான கொலையாளி கதாபாத்திரத்தை ரொம்பச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அவர் கொலை செய்துவிட்டு பேசும் வசனங்களை விட, ரயில் மற்றும் பேருந்தில் உடன் வருபவரைக் கலாய்த்துப் பயமுறுத்துவதில் ஸ்கோர் செய்திருக்கிறார். ராணுவ அதிகாரி, காதல் என இரண்டுமே இந்தக் கதையில் நானிக்குப் பொருந்தவில்லை. கொலையாளியாகப் பார்த்துவிட்டு, ப்ளாஷ்பேக் ஆக வருவது காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
காவல்துறை அதிகாரியாக சுதீர் பாபு. உடலமைப்பு மாற்றம், கொலையாளியைத் துரத்துவது, நிவேதா தாமஸ் உடன் காதல், கொலையாளியைப் பிடிக்க முடியாமல் கோபம் கொள்வது எனச் சரியாகப் பொருந்தி இருக்கிறார். நிவேதா தாமஸ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் சின்ன சின்னக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிதி ராவ் ப்ளாஷ்பேக் காட்சிகளில் வந்துவிட்டுப் போகிறார். நானி – சுதீர் பாபு இருவருக்கும் இடையேயான மோதல் கதையில் இவர்கள் அனைவரும் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், பெரிதாகப் படத்தில் யாருக்கும் வேலையில்லை.
ஒளிப்பதிவு, எடிட்டிங், உடைகள், தயாரிப்பு வடிவமைப்பு என ரொம்பவே கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும்போதே ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் தெரிகிறது. படத்தின் பாடல்களுக்கு அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார். எதுவுமே படத்தோடு ஒட்டவில்லை, கேட்பது மாதிரியுமில்லை. தமன் பின்னணி இசையமைத்துள்ளார். நானி கொலை செய்ய வரும் காட்சி, கொலை செய்த பின் உள்ள காட்சிகளில் அப்படியே ‘ராட்சசன்’ படத்தின் பின்னணி இசையை உணர முடிகிறது. அதேபோல் சில இடங்களில் ‘அசுரன்’ படத்தின் பின்னணி இசை சாயலும் தெரிகிறது. பல காட்சிகளுக்கும், பின்னணி இசைக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருக்கிறது. கடைசி நேரத்தில் அவசர அவசரமாகச் செய்த உணர்வு ஏற்படுத்துகிறது.
படத்தின் முதல் பாதி உண்மையில் கச்சிதம்தான். கலவரம், சவால், தொடர் கொலைகள், த்ரில் என நகர்கிறது. அந்த அளவுக்கு மிகக் கச்சிதமாக எடிட் செய்திருக்கும் மார்தாண்ட் கே.வெங்கடேஷுக்குப் பாராட்டுகள். முதல் பாதிக் கதையை இவர் தான் காப்பாற்றியுள்ளார். இரண்டாம் பாதி கதை அப்படியே தொய்வடைந்து வழக்கமான ஒரு பழிவாங்கல் கதையாக மாறுவது சுத்தமாக ஒட்டவில்லை. சண்டைக் காட்சிகள், துரத்தும் காட்சிகள் என ரசிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். புதுப்புது ஐடியாவாகக் கொலை செய்வது நன்றாக இருந்தாலும், அதற்கான காரணம் தெரியவரும் போது இதற்கு ஏன் சைக்கோ தனமாக கொலை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. கொலைக்கான காரணம் பல படங்களில் பார்த்ததுதான் என்பதால், அது பெரிதாக ஈர்க்கவில்லை.
நானியின் 25-வது படம், ஓடிடியில் தெலுங்கிலிருந்து பெரிய ஹீரோ படம் என்று பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார்கள். அந்த அளவுக்குப் படம் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. வழக்கமாக ஓடிடியில் வெளியாகும் படங்களில் ஒன்று என்று கடந்துவிட வேண்டியதுதான்.

Related posts