எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்

கொரோனாவுக்கு 29 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த 5-ந்தேதி சென்னை சூளைமேடு எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 29 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையில் உள்ளது. அவர் விழிப்புடன் இருக்கிறார். சொல்வதை புரிந்து கொள்கிறார். மருத்துவ முறையிலான முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.”

இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது தந்தையின் உடல்நிலை 4-வது நாளாக சீரான நிலையில் உள்ளது. இந்த வாரம் இறுதியில் நல்ல செய்தி வரும் என்று நம்புகிறோம். கடவுள் ஆசீர்வாதத்தோடும், அனைவரின் பிரார்த்தனையோடும் வருகிற திங்கட்கிழமை சில நல்ல தகவல் வரும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி” என்று பேசியுள்ளார்.

Related posts