குடும்ப ஆட்சியா? ஜனநாயக ஆட்சியா? மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்

மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சி தொடரும், தொலைபேசி சின்னத்திற்கு வாக்களித்தால் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்படும் எனவே எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

லிந்துலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த நாட்டில் குடும்ப ஆட்சி நிலவியதன் காரணமாகவே இந்த நாட்டு மக்கள் 2015 ஆம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தினார்கள். அந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சரியாக செயற்படவில்லை என்ற காரணத்தால் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் இன்று மீண்டும் இந்த நாட்டில் குடும்ப ஆட்சி ஒன்று ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை இந்த அரசாங்கம் அமைத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாகவே அநேகமான ராஜபக்ஷக்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். அவர்கள் வெற்றி பெறுகின்ற நிலையில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு குடும்ப ஆட்சி ஏற்படுத்தப்படும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அது இந்த நாட்டிற்கு ஏற்புடையதாக இருக்காது.

இதனை கருத்தில் கொண்டே நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த முறை சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகின்றோம். நாங்கள் வெற்றி பெற்று சஜித் தலைமையில் ஒரு ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவோம்.

இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெற்றால் மாத்திரமே சிறுபான்மை மக்கள் சுதந்திரமாகவும் உரிமைகளோடும் வாழ முடியும். எனவே யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த சரியான தீர்மானத்தை நீங்கள் அனைவரும் எதிர்வரும் 5 ஆம் திகதி எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

-மலையக நிருபர் தியாகு-

Related posts