கரோனா நெகட்டிவ் செய்தி தவறானது: அமிதாப் பச்சன்

கரோனா தொற்று நெகட்டிவ் என்று வெளியான செய்தி தவறானது என அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு ஜூலை 11-ம் தேதி இரவு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்குக் கரோனா தொற்று உறுதியாகவே, இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அமிதாப் பச்சனின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வந்தது. இதனிடையே, இன்று (ஜூலை 23) மாலை அமிதாப் பச்சனுக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்திருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியானது.
இதனால், அமிதாப் பச்சனுக்குப் பலரும் வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கினார்கள். இந்தச் செய்தி தொடர்பாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவில், “இந்தச் செய்தி தவறானது, பொறுப்பற்றது, போலியானது, மாற்றமுடியாத பொய்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட்டின் மூலம் அவருக்குக் கரோனா தொற்று இன்னும் சரியாகவில்லை என்பது தெளிவாகவுள்ளது. அமிதாப் பச்சனின் இந்த வெளிப்படைத் தன்மைக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள்.
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆராத்யா இருவருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருவது நினைவுகூரத்தக்கது.

Related posts