மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும் – ரஜினி

கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… எல்லா மதமும் சம்மதமே .. என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், கந்த சஷ்டி கவசத்தை மனமுருக பாடி வழிபாடு செய்வார்கள். அதன்மூலம் பயம் நீங்கி அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக விமர்சித்து ஒரு யூடியூப் சேனலில் வீடியோ வெளியானது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதோடு, வழிபாட்டு முறையை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் செந்தில்வாசன், சுரேந்திரன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சென்னையில் உள்ள கருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.

இதற்கிடையில் கருப்பர் கூட்டம் யூ-டியூப் பக்கத்தில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பல வீடியோக்கள் இருந்ததால் அந்த சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக நீக்கினர்

கந்த சஷ்டி கவசத்தைஅவதூறு செய்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் கந்த சஷ்டி கவசத்தை மிக கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தியுள்ளனர் என ரஜினிகாந்த் கூறி கண்டனம் டுவிட் செய்து உள்ளார்.

கந்த சஷ்டி கவசத்தை மிக கேவலமாக அவதூறு செய்துபலகோடி மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்க செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள்மீது தூரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தபட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்..ஒழியணும்

எல்லா மதமும் சம்மதமே .. கந்தனுக்கு அரோகரா என கூறி உள்ளார்.

Related posts