சுஷாந்த் சிங் புத்திசாலி ஆனால் புரிந்துகொள்ள முடியாதவர் !

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு புத்திசாலி என்றும், ஆனால் அவரைப் புரிந்து கொள்வது கடினம் என்றும் அவரை ‘கை போ சே’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநர் அபிஷேக் கபூர் கூறியுள்ளார்.
ஜூன் 14-ம் தேதி அன்று நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம், கலைஞர்களுக்கு இருக்கும் மன அழுத்தம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. இன்னொரு பக்கம் பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல் பற்றிய சர்ச்சையும் பெரிதாக வெடித்துள்ளது.
சுஷாந்த் நடிகராக அறிமுகமானது ‘கை போ சே’ என்ற படத்தில். இந்தப் படத்தின் இயக்குநர் அபிஷேக் கபூர். சில வருடங்கள் கழித்து சுஷாந்தை நாயகனாக வைத்து ‘கேதர்நாத்’ என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். சுஷாந்தைத் தொலைத்தது ஒரு குழந்தையைத் தொலைத்தது போல இருக்கிறது என்று கூறியுள்ள இயக்குநர் அபிஷேக் கபூர், ‘கேதர்நாத்’ திரைப்படம் வெளியான காலகட்டத்தில் நடந்தது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.
“சுஷாந்த் மீது பாலிவுட் ஏற்படுத்திய தாக்கம் கண்கூடாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு மென்மையான மனம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்தது புரிந்தது. நீ ஏற்கெனவே ஒரு நட்சத்திரம்தான். யாரும் அதை அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே என்று நான் அவரிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். ஆனால், தனக்குக் கிடைக்காத அங்கீகாரத்தை அவர் தேடிக் கொண்டே இருந்தார்.
பாலிவுட்டில் வெளியிலிருந்து வரும் நபர்களை ஒதுக்கிவைக்கக் கூடாது. ஒரு நடிகனின் திறமையைக் கொண்டாடுவது அவனுக்கு ஆக்சிஜன் தருவதைப் போல. அந்தக் கொண்டாட்டம் இல்லையென்றால் அவன் இறந்துவிடுவான்.
எல்லாவற்றையும் தாண்டி இங்கு ஒரு நிர்வாகம் உள்ளது. அது கலைஞர்களை வியாபாரப் பொருளாகப் பார்க்கிறது. நம்மிலிருக்கும் மனிதத்தை அது வெளியேற்றிவிடுகிறது. ஒரு கலைஞனின் பொறுமையின் அளவை யாரும் பார்ப்பதில்லை. அவனை எவ்வளவு பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. அவனை வைத்துப் பல கோடி சம்பாதிக்கப் போகும் ஒரு நிர்வாகம் குறைந்தது அவனை மனநல ரீதியாக, படைப்பாற்றல் ரீதியாக அக்கறையுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சுஷாந்த் மென்மையானவர். அப்படி ஆகிவிட்டார். அவர் நல்ல புத்திசாலி. ஆனால் புரிந்துகொள்ளக் கடினமானவர். ஏனென்றால் அவரை வகைப்படுத்த முடியாது என்பதால் அவர் சரியில்லை என்று சொல்வோம்.
நான் ஒன்றரை வருடங்களாக அவரிடம் பேசவில்லை. சில நேரங்களில் பேசுவோம். அதன் பிறகு படம் இயக்கப் போய்விடுவோம். அவர் 50 முறையாவது தனது மொபைல் எண்ணை மாற்றியிருப்பார். ‘கேதர்நாத்’ திரைப்படம் வந்தபோது ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஏன் என்று எனக்குத் தெரியாது. தனக்குக் கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்கவில்லை என்பதை சுஷாந்த் பார்த்தார். அன்று எல்லாமே சாரா அலிகானைச் சுற்றியே இருந்தது. அவர் அதில் ஒரு மாதிரி தொலைந்துவிட்டார். படம் வெளியாகி நன்றாக வசூலிக்க ஆரம்பித்ததும் நான் அவருக்கு ஒரு செய்தி அனுப்பினேன்.
அதில் ‘நான் உங்களைத் தொடர்பு கொள்ள முயன்று வருகிறேன். நீங்கள் வருத்தமாக இருக்கிறீர்களா அல்லது அலுவலில் இருக்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னை அழையுங்கள். நாம் பேசுவோம். நாம் மீண்டும் ஒரு சிறப்பான படத்தைக் கொடுத்துள்ளோம். நாம் அதைக் கொண்டாடவில்லை என்றால் வாழ்வில் வேறு எதை நாம் கொண்டாடப் போகிறோம்? எனவே தயவுசெய்து என்னை அழையுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால், அவர் என்னை அழைக்கவில்லை. அவர் பிறந்த நாளின் போதும் பதில் வரவில்லை. சரி பரவாயில்லை என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். அவர் சரியான மனநிலையில் இல்லை என்பது தெரிந்தது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் நாம் எல்லை மீற முடியாது. ஒருகட்டம் வரைக்கும்தான் நாம் முயற்சி செய்ய முடியும். கோரப்படாமல் அறிவுரை கொடுத்தால் அதன் மதிப்பு போய்விடும். சில நேரங்களில் அவரை அழைக்க வேண்டும் என்று நினைப்பேன். பின், சரி அவர் பேசட்டும், அப்போது பிடித்துக் கொள்வோம் என்று நினைப்பேன். அவர் என்னை அழைக்கவேயில்லை”.
இவ்வாறு அபிஷேக் உணர்ச்சிகரமாகப் பகிர்ந்துள்ளார்.

Related posts