சுஷாந்த் சிங் மரணம்: காதலியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டர்.

சுஷாந்த் சிங்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், தூக்குக் கயிறு கழுத்தில் இறுக்கியதால் மூச்சு திணறி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சுஷாந்த்தின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், வியாழக்கிழமை, சுஷாந்தின் உதவியாளராக இருந்த ராதிகா நிஹலானி மற்றும் முன்னாள் மேலாளர் ஸ்ருதி மோடி ஆகியோரிடம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களையும் போலீசார் பதிவு செய்தனர். ஸ்ருதி மோடி 2019 ஜூலை முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை சுஷாந்த் உடன் பணிபுரிந்ததால் அவரிடம் வாக்குமூலத்தை போலீசார் பெற்றுள்ளனர்.

அவர் சமுதாய சேவைக்காக நேஷன் இந்தியா ஃபார் வேர்ல்டு என்ற அமைப்பை தொடங்க சுஷாந்த் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்ததாக கூறி உள்ளார். சினிமாவைத் தாண்டி சமூகம் சார்ந்த பல விஷயங்களை செய்ய அவர் ஆலோசித்து வந்ததாக ஸ்ருதி மோடி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

சுஷாந்த் உடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்தியை பந்த்ரா காவல்நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில், சுஷாந்தின் நடவடிக்கைகள் குறித்தும், அவருக்கு இருந்த மன உளைச்சல் குறித்தும், இருவருக்கும் இடையிலான உறவு குறித்தும் முழுமையாக விசாரிக்கப்பட்டது.

‘விசாரணையில் ரியா நானும் சுஷாந்தும் பாந்திராவில் உள்ள வீட்டில் சேர்ந்து வாழ்ந்தோம். நவம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தோம். திருமணத்துக்கு பிறகு, புது வீடு வாங்கி குடிபோகும் திட்டம் இருந்தது.

ஊரடங்கு காலத்தில் பாந்திரா வீட்டில்தான் இருந்தோம். எங்களுக்குள் சண்டை ஏற்பட்டதால், கார்ட்டர் ரோடில் உள்ள என் வீட்டுக்கு சென்று விட்டேன். ஆனாலும்,சுஷாந்துடன் போனில் பேசிக் கொண்டுதான் இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

விசாரணையின் போது, தன் செல்போனை போலீஸாரிடத்தில் ரியா கொடுத்தார். இருவருக்குள்ளும் பகிரப்பட்ட விஷயங்களை போலீஸார் ஆய்வு செய்தனர். சுசாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு , ரியாவிடத்தில் இரண்டாவது முறையாக போலீஸார் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே, தில் தோ பாஹல் ஹே போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த.பாலிவுட்டின் பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸில் நடிக்க சுஷாந்த்சிங்குக்கு மூன்று வாய்ப்புகள் கிடைத்தன. இந்த ஒப்பந்தங்கள் குறித்தும் ரியாவிடத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சுதேஷி ரோமன்ஸ் மற்றும் டிடெக்டிவ் பியாம்கேஷ் பக்ஷி ஆகிய படங்களில் சுசாந்த் நடித்துள்ளார். அடுத்த படமாக சேகர் கபூர் இயக்கத்தில் பாணி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த ஒப்பந்தத்தை யாஷ்ராஜ் பிலிம்ஸ் ரத்து செய்தது. விசாரணையின் அடுத்த நகர்வாக யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவன அதிகாரிகளை விசாரிக்க மும்பை போலீஸ் திட்டமிட்டுள்ளது.

தோழி ரியா சக்ரவர்த்தியின் வாக்குமூலம், இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது சுஷாந்த் மரண சர்ச்சையில், சந்தேகங்களுக்கு போலீசார் விடை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, சுஷாந்த் தற்கொலை செய்துகொள்வதற்கு 6 நாட்களுக்கு முன்பு, அவரது முன்னாள் மேலாளர் திஷா சலையன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சுஷாந்த்தின் தற்கொலைக்கும், திஷாவின் தற்கொலைக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts