இணையத்தில் வெளியிட்டால் 1000 கோடி

ராஜமெளலி படத்தை இணையத்தில் வெளியிட்டால் 1000 கோடி ரூபாய் வசூல் கிடைக்கும் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. தமிழ்த் திரையுலகில் தயாராக இருக்கும் படங்கள் எல்லாம் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனிடையே, தெலுங்குத் திரையுலகில் ராம் கோபால் வர்மா இயக்கி, தயாரித்த ‘க்ளைமேக்ஸ்’ படத்தை அவருடைய இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் படத்தை 100 ரூபாய் கொடுத்துப் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார். ‘க்ளைமேக்ஸ்’ படம் வெளியான 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு ராம் கோபால் வர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
“ஒரு படம் முதல் வார இறுதியில் வசூல் செய்ய வேண்டும் என்று அதற்காக விளம்பரம் செய்கின்றனர். இசை வெளியீட்டு விழா நடத்துகின்றனர். இதன் பிறகு விநியோகஸ்தருக்கான பணம், திரையரங்குக்கான பணம் என்று செலவு செய்கின்றனர். இவை அனைத்துக்குமான செலவு போகத்தான் தயாரிப்பாளருக்குப் படத்தில் வசூல் பணம் வருகிறது. அதை நேரடியாக மக்களிடமே எடுத்துச் சென்றால் கூடுதல் செலவுகள் குறையும், பணம் நேரடியாக தயாரிப்பாளருக்கே வரும். ரசிகர்கள் ஓடிடியில் படம் பார்க்க மாட்டேன் என்று சொல்லவில்லை. இப்போது அதை நிரூபித்தும் இருக்கிறார்கள்.
நான் எனது ‘க்ளைமேக்ஸ்’ திரைப்படத்தை எனது சொந்த இணையதளத்தில் வெளியிட்டேன். என்னைப் பிடிக்கும் என்பவர்கள், நான் எடுக்கும் சினிமா பாணி பிடிப்பவர்கள் என அவர்கள் மட்டுமே வரப்போகிறார்கள். அவர்களுக்காக எனது (இணையதள) திரையரங்கில் நேரடியாகப் படத்தைத் திரையிடுகிறேன். எனது படத்தை ஒரு நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணம் கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள். இத்தனைக்கும் எங்கள் தளத்தில் சில பிரச்சினைகள் வந்து என் படத்தின் கள்ளப் பிரதி சில இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுவிட்டது. அப்படியுமே நான் நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள் என்றால் திரையரங்கு எதற்கு. அதற்கு அர்த்தம் என்ன?
அடுத்து ‘நேக்கட்’ என்ற படத்துக்கான டிக்கெட் விலையை 200 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறேன். அதன் மதிப்பு 200 ரூபாயா, 100 ரூபாயா, 50 ரூபாயா என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்? பிடித்திருந்தால் மக்கள் வாங்குவார்கள், இல்லை வாங்க மாட்டார்கள், அவ்வளவுதானே.
இந்தியா முழுவதும் திரைப்பட ஆர்வலர்கள் அனைவரும் எதிர்நோக்கியிருக்கும் திரைப்படம் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’. ‘பாகுபலி’க்குப் பிறகு அவர் எடுக்கும் படம், பெரிய பெரிய நடிகர்கள் இருக்கின்றனர், பிரம்மாண்டமான படைப்பு என அத்தனையும் இருக்கும் படம். எனது எளிமையான கணக்கு என்னவென்றால், இப்போது அந்தப் படத்தை, ராஜமௌலி தனது (இணையதள) திரையரங்கில் ஏதோ ஒரு நாள் வெளியிட முடிவு செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது வெள்ளியோ, வியாழனோ, ஞாயிறோ ஏதோ ஒரு நாள். அவர் விருப்பத்திற்கு ஏற்ப வெளியிடுகிறார்.
அதற்காக விளம்பரம் செய்ய பெரிய பலகைகள், இசை வெளியீடு, அதற்கு வரும் நட்சத்திரங்களைப் புகழ்வது, பத்திரிகையாளர் சந்திப்பு என எதுவும் தேவையில்லை. டிஜிட்டலில் விளம்பரம் செய்தால் போதும். ஏனென்றால் ரசிகர்கள் ராஜமௌலி என்பவரின் படத்தைப் பார்க்கத்தான் வருகிறார்கள்.
இப்போது நான் என் ‘க்ளைமேக்ஸ்’ படத்துக்கு 100 ரூபாய் டிக்கெட் விலை வைத்து, அதை ஒரு நாளில் 2 லட்சம் பேர் பார்க்கிறார்கள். ராஜமௌலி அவர் படத்துக்கு 1000 ரூபாய் அல்லது 2000 ரூபாய் என அவர் விருப்பத்திற்கு ஏற்ப டிக்கெட் விலை வைத்தால், ஒரு குடும்பம் சேர்ந்து அந்த 1000 ரூபாய்க்குப் பார்ப்பார்கள் அல்லது 5-6 நண்பர்கள் சேர்ந்து பார்ப்பார்கள். அவர்கள் மொபைலில் பார்க்கிறார்களா, ஹோம் தியேட்டரில் பார்க்கிறார்களா என்பதெல்லாம் அவர்கள் விருப்பம்.
இப்படிச் செய்தால் ராஜமௌலியின் அடுத்த படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருப்பவர்கள் அனைவரும் முதல் சில மணி நேரங்களில் பார்த்து விடுவார்கள். ஒரு வாரம் டிக்கெட் கிடைக்கவில்லை, பெரிய வரிசை இருக்கிறது என்றெல்லாம் பிரச்சினைகள் வராது. படத்தைக் குறைந்தது 1 கோடி பேர் பார்த்தால் என்ன ஆகும் என்று யோசியுங்கள். அவருக்கோ, தயாரிப்பாளருக்கோ நேரடியாக 1000 கோடி ரூபாய் வசூல் போய்ச் சேரும். இடையில் திரையரங்கக் கட்டணம், விநியோகஸ்தர்கள் கமிஷன் கிடையாது. கணக்கு சரியாகக் காட்டுகிறார்களா என்ற கவலை வேண்டாம். எடுத்தவர் ராஜமௌலி, பார்ப்பவர்கள் ரசிகர்கள். அவ்வளவுதான்”.
இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

Related posts