இலங்கை ஊடகங்களின் குறுஞ் செய்திகள் : 21.04.2020

களவாடப்பட்ட பசுமாட்டை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச்சென்ற இருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை நகரத்தின் ஊடாக பயணித்த வேளையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே விடயம் அம்பலமாகியுள்ளது.
இருவரும் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்களென்றும், மாட்டின் காலொன்றில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

——

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 97 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

—–

பேலியகொடை மீன் சந்தையை நாளை (22) முதல் 03 தினங்களுக்கு மூடுவதற்கு அதன் வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
பிலியந்தலையைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் நேற்று (20) கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவர் மீன் கொள்வனவு செய்வதற்காக குறித்த சந்தைக்கு வருகை தந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் 154 மீன் கடைகள் உள்ளன. இந்நிலையில் அதன் விற்பனையாளர்கள் நாளையதினம் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், குறித்த வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமஆராச்சி தெரிவித்துள்ளார்.

—–

Related posts