வல்வை எப்.சி. இறுதியாட்டத்திற்கு தேர்வு இன்றைய பரபரப்பான ஆட்டம்!

வடக்கு கிழக்கு மகாகாணங்களை உள்ளடக்கி நடைபெறும் என்.ஈ.பி.எல் உதைபந்தாட்ட லீக் சுற்றுப்போட்டியில் முக்கியமான அரையிறுதி போட்டி இன்று ( 22.09.2019 )பி.ப ஏழு மணியளவில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வெற்றிகரமாக ஆரம்பித்தது.

வல்வை எப்.சி அணியை எதிர்த்து நொதேன் எலிற் (என்.ஈ.எப்.சி) மோதியது. வாழ்வா இல்லை சாவா..? என்பது போன்ற, போர்க்கள மோதலாக ஆட்டம் அமைந்திருந்தது. (இறுதிப்போட்டி ஒன்றுக்கு வருவதை விட) அதிகமான பார்வையாளரின் பலத்த கரவொலிகளுக்கிடையில் ஆட்டம் ஆரம்பமானது.

என்.ஈ.பி.எல் போட்டியில் அதிக கோல்களை போட்ட அணிகளில் ஒன்றான வல்வை எப்.சி வெற்றி பெறும் என்ற கணக்கு ஆட்டம் ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே தப்பான கணிப்பாக மாறியது. காரணம் நொதேன் எலிற் அணி மிகச்சிறப்பாக ஆடத் தொடங்கியது. ஆட்டம் சவாலாகிவிட்டது தெரிந்தது.

இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது, நொதேன் எலிற் அணி வீரர்களுக்கு இந்த ஆட்டத்தில் வென்றால் ஒவ்வொருவருக்கும் தலா 20.000 பணப்பரிசு என்று அறிவித்திருந்தனர் அந்த அணியின் உரிமையாளர். மேலும் இறுதி சுற்றில் வென்றால் 50.000 என்றும் அறிவித்திருந்தனர்.

இதனால் நொதேன் எலிற் அணி வீரருக்கு தலையில் இன்னொரு பாரமும் ஏறியது. பணம் குதிரையின் முன் கட்டிய கரட் போல அவர்களை விரட்டியது. அறிவிப்பாளர் ஒருவரும் அதை திரும்ப திரும்ப கூறியபடியிருந்தார்.

பணம் கொடுத்து வெல்ல வைக்க முடியுமென்றால் சவுதி அரேபியா அணியல்லவா உலக கிண்ணத்தை வெல்ல வேண்டும்..? முதலில் வெற்றி என்பது லேசர் போல இலக்கை குறி வைத்த பயணம் அல்லவா..? என்பது வல்வை எப்.சிக்கு வழங்கப்பட்ட ஆலோசனையாக இருந்தது.

இவ்விதமாக இரு கருத்துக்கள் பேசப்பட்டன. ஈற்றில் எது சரி என்பதை அறிய போட்டியின் முடிவுவரை காத்திருக்க வேண்டியிருந்தது.

அத்தோடு இந்தப் போட்டி தென்னாசியாவில் அதிக பணத்தொகை பரிசளிக்கும் போட்டியாகவும் இருப்பதால் இரு அணிகளிடையேயும் வெற்றி ஆர்வம் அதிகமாகவே இருந்தது. மொத்தம் ஒரு கோடி ரூபா பணப்பரிசு கொண்ட இலங்கையின் ஒரேயொரு ஆட்டம் அல்லவா..?

இலங்கையின் தேசிய அணியில் உள்ள விளையாட்டு வீரர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரை இந்த அணிகளில் பல தரப்பட்ட ஜாம்பவான்கள் இருந்தனர். போட்டியில் பங்கேற்கும் இந்த வீரர்களை பெரும் பணத்திற்கு ஏலம் எடுத்திருந்தார்கள்.

“விளையாட்டு சோறு போடுமா.?” என்ற நம்பிக்கை வரட்சியில், விளையாட்டை கேலி செய்து வந்த ஈழ தமிழ் இனத்தில் இப்படியொரு காலம் மலர்ந்திருப்பதை நம்பத்தான் முடியுமா..?

(இதற்குரிய மூலச்சிந்தனை ரியூப் தமிழ் ஆதரவுடன் நடந்த வடக்கு கிழக்கு இணைந்த உதைபந்தாட்டப் போட்டியில் இருந்தே மலர்ந்தது என்ற உண்மையை சிலர் இருட்டடிப்பு செய்ய புறப்பட்டாலும் உண்மை உண்மைதான்.)

இப்படியாக வராற்றையே பறி கொடுக்கக் கூடிய அபாயமான, பணம் விளையாடும் போட்டியில் இன்று ரியூப்தமிழின் வல்வை எப்.சி அணி, வடமராட்சி என்.ஈ.எப்.சி அணியிடமிருந்து ஆரம்பத்திலேயே பலத்த எதிர்ப்பை சந்தித்தது. எப்படியாவது வல்வை எப்.சி.யை வென்று, இறுதியாட்டத்தை தொட அவர்கள் அரும்பாடுபட்டனர்.

ஆனால்.. அந்தோ..

ஆட்டம் முடிவடைய இரண்டு நிமிடங்களே இருக்கும் நிலையில் வல்வை எப்.சி யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு கோலை போட்டு வெற்றி பெற்றது. அடுத்திருந்த ஒரேயொரு நிமிடத்தில் என்.ஈ.எப்.சி வீரர்களால் எதுவும் செய்ய முடியாது போய்விட்டது.

இந்த ஆட்டத்தின் சிறப்பம்சம் வியூகமாகவே இருந்தது. இரண்டு அணி பயிற்றுனர்களும் எதிரணியை வெல்ல வியூகம் வகுத்திருந்தனர். என்.ஈ.எப்.சி அணி பின்புற அரணை இரும்பு போல போட்டு கோல் போகவிடாது தடுக்கவும், அந்த அரணை உடைக்க வல்வை எப்.சி போராடி இயலாது களைத்து நிற்க, அபிமன்யுவை வீழ்த்தியது போல வீழ்த்தலாம் என்பது என்.ஈ.எப்.சி வியூகமாக இருந்தது.

ஆனால் அபிமன்யு போல மடைத்தனமாக வியூகத்தை உடைத்து உள்ளே போய் மாட்டிக்கொள்ளாது, வெளியில் நின்று ஆடி வியூகத்தை கொலகொலக்க வைக்க வல்வை எப்.சி முயன்றது.

வல்வை எப்.சி அணி முதலில் கோல் போடக்கூடாது என்றவாறு வியூகம் வகுக்கப்பட்டிருந்தது. மேலும் அரணை உடைத்து கோல் போட்டால் எதிரணி வீறு கொண்டு விடுவார்கள் என்பதை உணர்ந்து அவர்களை களைப்படைய வைக்கும் வேலையை கச்சிதமாக செய்தது.

உண்மையில் இரண்டு வியூகங்களுமே சரிதான் ஆனால் வெற்றி ஆனால் வெற்றிக்கான பந்து வாய்ப்பாக வரும்போதுதான் வியூகமே வெற்றியாகும் அல்லவா.?

இரு அணிகளுக்கும் நிறைய வாய்ப்புக்கள் வந்தன, ஆனால் கோலாக அவை முதிராமல் முடிந்துவிட்டன.

இனி ஆட்ட நீட்டிப்புதான் என்று காத்திருக்க வெற்றிக்கனி வல்வை எப்.சியின் மடியில் வீழ்ந்தது.

1 – 0 என்ற கோல் கணக்கில் வல்வை எப்.சி வென்றது.

இன்றைய ஆட்டத்தின் இரு அணிகளும் சம பெறுமதியுடனேயே விளங்கினார்கள். என்.ஈ.எப்.சி அணியும் சாதாரண அணியல்ல என்பதை அவர்கள் விளையாட்டு காட்டியது.

பயிற்றுநரின் கட்டளையை ஏற்று விளையாடியமையே வல்வை எப்.சி யின் கடைசி நேர வெற்றிக்கு காரணமானது என்றால் அது மிகையல்ல. ரியூப் தமிழ் இலங்கை நிர்வாகி டிவானியா ஒரு பெண்ணாக நின்று மைதானத்தில் சாதித்திருப்பதை அனைவரும் பாராட்டினர்.

வல்வை எப்.சியின் வீரர்கள், அதன் பொறுப்பாளர்கள், உரிமையாளர் சு. ரவிசங்கர்,நிர்வாகி கஜன், ஜிவிந்தன் உட்பட அனைவரும் பாராட்டுக்குரிய கடமையை சிறப்பாக செய்து, கடினமான ஒரு சவாலை முறியடித்து வென்றுள்ளனர்.

வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்..

அலைகள் விளையாட்டு துறை நிருபர். 22.09.2019

Related posts