தேன்கூட்டில் கை வைத்திருக்கிறார் அமித்ஷா : வைகோ

இந்தி மொழிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்ததன் மூலம் அமித் ஷா தேன்கூட்டில் கை வைத்திருக்கிறார் என்று மதிமுக தலைவர் வைகோ விமர்சித்துள்ளார்.

பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக தலைவர் வைகோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் வைகோ. அப்போது அவர் கூறும்போது,

”இந்தி மொழி ஆதரவுக் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பாராட்டுக்கு உரியது.

இந்தியா என்ற நாடு, உப கண்டம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதற்கு தொன்மை வாய்ந்த தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும். 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்க வேண்டும்.

இந்தியைத் திணித்து ஒரு நாடு என ஏற்படுத்திவிடலாம் என்று இந்த அரசு முயன்றால் அது தோற்கடிக்கப்படும். இந்தி மொழிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்ததன் மூலம் தேன்கூட்டில் கை வைத்திருக்கிறார் அமித்ஷா. குளவிகள் கொட்ட ஆரம்பித்துவிட்டன.

தமிழகத்தின் கட்-அவுட், பேனர்கள் வைக்கக்கூடாது என்று அறிவித்து, பிரகடனம் செய்து அதைச் செயல்படுத்திய ஒரே கட்சி மதிமுகதான்” என்றார் வைகோ.
இந்தி மொழி அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி நாள் கொண்டாடப்பட்டது.

இதற்கு பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ட்விட்டரில் இந்தியில் வாழ்த்துத் தெரிவி்த்தார்.

அதில் அவர் கூறுகையில், “இந்தியா பல்வேறுவிதமான மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மொழிக்கும் தனக்கே சொந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், இந்த உலகில் இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருப்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts