மதுரை தொகுதியில் களமிறங்கும் பிரேமலதா?

மதுரை மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் பிரேமலதா போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள் ளன. இதனால் உற்சாகமடைந்துள்ள கட்சியினர், தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுகவில் செல்வாக்கு மிக்க தலைவர்களாகத் திகழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின் நடைபெறும் மக்களவைத் தேர்தல் என்பதால் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த தேர்தலாக உள்ளது. அதிமுக அணியில் பாமக, பாஜக இடம்பெற்றுள்ள நிலையில் தேமுதிகவையும் இழுக்க பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேபோல், திமுக அணியில் சேருமாறு திருநாவுக்கரசர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தின் உடல் நலம் விசாரிப்பதுபோல் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தேமுதிகவை தங்கள் அணிக்கு இழுப்பதில் அதிமுக, திமுக இடையே போட்டி நிலவுகிறது. தேமுதிக கேட்கும் சீட்களை வழங்க இரு அணிகளும் தயங்கும் நிலையில், 40 தொகுதிகளிலும் தேமுதிக தலைமை தனது கட்சியினரிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. தங்கள் தொகுதியில் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா போட்டியிட வேண்டும் என தேமுதிக தொண்டர்கள் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் பிரேமலதா போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை விஜய காந்துக்கு சொந்த ஊர் என்பதோடு, கட்சி தொடங்கிய இடம் என்பதால் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு மதுரையில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என கட்சி நிர்வாகிகள் கணக்குப் போட் டுள்ளனர். மதுரையில் தேர்தல் பணியைத் தொடங்க கட்சி நிர்வாகிகளுக்கு தேமுதிக தலைமை உத்தரவிட்டுள்ளதால் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் பட்சத்தில் மதுரை தொகுதியை தேமுதிக கேட்டுப் பெறும் எனத் தெரிகிறது. பிரேமலதா மதுரையில் போட்டியிட முடிவு செய்துள்ள தகவலால் கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இது குறித்து தேமுதிக தொழிற்சங்க மாநிலப் பொருளாளர் முஜிபுர் ரகுமான் கூறியதாவது: மதுரையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை நிறுத்தினால் தொண்டர்களுக்கு இதைவிட மகிழ்ச்சியானது வேறு எதுவும் இருக்காது. கூட்டணியில் சேரும் பட்சத்தில் மதுரையைக் கேட்டுப் பெறுவோம். தலைவர் விஜயகாந்த், பொருளாளர் போட்டியிட விருப்பம் தெரிவித்து என் னைப் போன்ற தொண்டர்கள் மனுக்கள் அளித்துள்ளோம். மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட பொருளாளர் பிரேமலதா முடிவெடுத்துள்ளதால் கட்சித் தலைமையிடமிருந்து தேர்தல் பணியைத் தொடங்க உத்தரவு வந்துள்ளது. இதனால், தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டோம்.

எங்களுக்கென தனி ஓட்டு வங்கி உள்ளது. தேமுதிகவுக்கு ஒன்றுமே இல்லை எனச் சொன்னவர்கள் தற்போது எங்களைத் தேடி வருகின்றனர். எங்களின் வளர்ச்சியைத் தடுக்க திமுக, அதிமுக திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பின. தற்போது தேமுதிகவின் பலத்தை அவர்களே மதிக்கின்றனர். எப்போதும்போல கட்சி பலமாகத்தான் உள்ளது. எங்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts